×

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ்: அரசு, தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் நோய் மீண்டும் பரவி வருகிறது. இந்த நோய் பாதித்து இதுவரை 2 பேர் இறந்துள்ளனர். கடந்த மாதம் 30ம் தேதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் மரணமடைந்தார். ஆனால் அவருக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்படவில்லை. எனவே அவரது மரணத்திற்கு நிபா வைரஸ் தான் காரணமா என உறுதியாக கூறமுடியாது என்று கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

இந்த நோய் பாதித்து கோழிக்கோட்டில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கு இன்று நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இதுவரை கேரளாவில் நிபா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து கோழிக்கோட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 950 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் சுகாதார குழுக்கள் கோழிக்கோட்டில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். இன்று காலை கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் முகம்மது ரியாஸ், சசீந்திரன், அகமது தேவர்கோவில் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. கோழிக்கோட்டிலுள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்காக தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர தேவை இல்லாமல் யாரும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ்: அரசு, தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Hospitals ,Thiruvananthapuram ,Kozhikott ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...