×

பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல்

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது. பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதியப் படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கவும் விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதனால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

எனவே காலி மனையிடங்களை ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. எனவே இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து அரசு புதியதொரு முடிவினை எடுத்துள்ளது.

அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும். இந்த நடைமுறையானது எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும்

The post பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Secretary of Government ,Department of Commerce ,and Registry ,Chennai ,Government of Tamil Nadu ,Secretary of State of Commerce and Registry ,
× RELATED 15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய...