புதுச்சேரி: புதுச்சேரி அருகே புதிய மதுபான கடையை மூட வலியுறுத்தி 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவலர்கள் இழுத்துச்சென்று அப்புறப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி வில்லியனூர் சாலை ரயில்வே கேட் அருகே பட்டாணிகலம் என்ற இடத்தில் சமீபத்தில் புதிய மதுபான கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வில்லியனூர் பத்துக்கன்னு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டதால் மக்கள் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களை வில்லியனூர் காவல் துறையினர் தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த வில்லியனூர் எம்.எல்.ஏவும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மதுபான கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
The post புதுச்சேரி அருகே புதிய மதுபான கடையை மூட வலியுறுத்தி 2வது நாளாக சாலை மறியல்: பொதுமக்களை போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
