×

1,000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்திற்கு விளம்பர படத்தில் நடித்த நடிகருக்கு நோட்டீஸ்: ஒடிசா போலீசார் நடவடிக்கை

புவனேஸ்வர்: 1,000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்த நடிகர் கோவிந்தாவுக்கு ஒடிசா போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.வடமாநிலத்தை சேர்ந்த சோலார் டெக்னோ அலையன்ஸ் என்ற நிறுவனம், பொதுமக்களிடம் பணம் வசூலித்து அந்த பணத்தை குறிப்பிட்ட காலகட்டத்தில் இரட்டிப்பு செய்து கொடுப்பதாக கூறி மோசடி செய்துள்ளது.

சங்கிலி முறையில் ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மேற்கண்ட நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில் பாலிவுட் நடிகர் கோவிந்தா, சில விளம்பர வீடியோக்களை வெளியிட்டார்.

இந்நிலையில் மேற்கண்ட நிதி நிறுவனம், பொதுமக்களை ஏமாற்றியதாக ஒடிசா மாநில ெபாருளாதார குற்றப்பிரவு போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் ரூ. 1,000 கோடி அளவிற்கு பணமோசடி நடந்துள்ளதாகவும், அந்த மோசடியில் கோவிந்தாவுக்கும் பங்குண்டு என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி ஷஷ்மிதா சாஹு கூறுகையில், ‘பணமோசடி தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். குறிப்பிட்ட தேதியில் அவர் ஆஜரான உடன் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

The post 1,000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்திற்கு விளம்பர படத்தில் நடித்த நடிகருக்கு நோட்டீஸ்: ஒடிசா போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bhubaneswar ,Odisha Police ,Govinda ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...