×

திட்டமிட்ட வளர்ச்சி…தமிழ்நாட்டின் எழுச்சி… என்ற தாரக மந்திரம் மூலம் மு.க.ஸ்டாலினால் உதயமான ‘திராவிட மாடல் மலர்ச்சி’: சத்தமில்லாத சாதனை பட்டியல்கள்

திராவிட இனத்தின் இதயம்: ஒரு பேரு சொன்னா ஊருக்கே தெரியனும் என சொல்லுவாங்க…ஆனா இவரு பேரு சொன்னா உலகத்துக்கே தெரியும்படி செய்யதவரு தான் ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’’. இது பேரு இல்ல ஒட்டுமொத்த திமுகவோட பிராண்டா மாறிடுச்சி. 13 வயதில் கருப்பு, சிவப்பு கொடியை தாங்கி பிடித்த கரம் தனது 68வது வயதில் கோட்டையில் கொடிநாட்டியது. பெரியார், அண்ணா, கலைஞரின் வழித்தோன்றல்கள் படி ‘I Belong To The Dravidian Stock’ என்ற கர்ஜனையோடு தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.  ஆம், திமுகவை தலைமையேற்று வழிநடத்தி வந்த மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி 2021ம் ஆண்டு தமிழ்நாட்டை தனது கைகளில் சுமக்க தொடங்கினார்.

உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த கொரோனா என்னும் உயிர்கொல்லி நோய் ஆட்டி படைத்து கொண்டிருந்த சூழலில் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன்படி, மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000, பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் இலவசமாக செல்லும் திட்டம் உள்ளிட்ட 5 கோப்புகளில் முதல்வராக தனது முத்திரையை பதியவைத்தார். திட்டங்களால் திளைத்து போன தமிழகம்: தந்தையின் ஆட்சியை கண்ட தமிழ்நாடு, இவருடைய ஆட்சி எப்படி இருக்கும் என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது எழுந்திருந்தது. சிறுவயது முதல் திராவிட சித்தாந்தங்களினாலும், பகுத்தறிவு, பெண்ணியம் போன்ற சிந்தனைகள் இருந்தாலும், பெரிய பதவியை எப்படி சமாளிக்க போகிறார் என்ற எண்ணம் சாமனியனின் மனக்கதவையும் தட்டிவிட்டு தான் சென்றன.

இருப்பினும், தன்னுடைய அரசு மக்களுக்கான அரசாகவும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொடுக்கும் ஆட்சியாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதீத கவனத்துடன் செயல்பட தொடங்கினார். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுமை பெண் திட்டம், முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இலவச பேருந்து திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், ரூ.4,805 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகள் திட்டங்களால் மாநிலத்தின் வளர்ச்சி என்பது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களே அவர்களின் மாநிலங்களில் அத்திட்டங்களை செயல்படுத்த தூண்டுவதற்கு உதாரணமாக இருந்தது.

இத்திட்டங்கள் அரசின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு மேலும், வலுசேர்க்கும் வண்ணமாக அமைந்தன. 1 டிரில்லியன் இலக்கு: அதேபோல, தமிழ்நாட்டை பொருளாதாரரீதியாக உயர்த்த நினைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் தான், முதல்வரின் துபாய் பயணம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை என தொழில் வளர்ச்சியை தமிழ்நாட்டில் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விவசாயிகளின் விடியல்: அதேபோல, இந்தியாவின் முதுகெழும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வண்ணம் எண்ணிலடங்கா திட்டங்களை வகுக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. அதன்படி வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அங்கக வேளாண்மை கொள்கையும் வெளியிடப்பட்டன. அதேபோல், 39.09 லட்சம் எக்டரில் உணவு தானிய பயிர் சாகுபடி, 122.15 லட்சம் மெட்ரிக் உணவு உற்பத்தி செய்து சாதனை என பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன.

உலக தரப்போட்டிகள்: அதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி இந்தியாவை மட்டுமல்ல உலகநாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது. 185 நாடுகளை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வசதிகளுக்கு ஏற்ப அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு தமிழகத்தை போல யாராலும் இது போன்று விளையாட்டு போட்டிகளை நடத்திட முடியாது என்ற பெயர் மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்பட்டது.

அதன்படி, புதிய அரசு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி நடைபோட்டுக்கொண்டு வரும் திமுக அரசின் இந்த சாதனை பயணம் மூலமாக மக்களிடம் அளிக்கப்பட்ட 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி ஒரு திட்டம் தான் அந்த ஒரு சதவீதம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய திட்டம் வரும் செப்.15ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. அதனை செயல்படுத்தி விட்டால் 100/100 சதவீதம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணமாக அமையும். அத்திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இத்திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் உள்ள 1.06 கோடி மகளிர் பயனடைய உள்ளனர். இத்திட்டம் அடுத்த பல நூறு ஆண்டுகளுக்கு மக்களிடத்தில் புயலாக வீசிக்கொண்டிருக்கும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.

The post திட்டமிட்ட வளர்ச்சி…தமிழ்நாட்டின் எழுச்சி… என்ற தாரக மந்திரம் மூலம் மு.க.ஸ்டாலினால் உதயமான ‘திராவிட மாடல் மலர்ச்சி’: சத்தமில்லாத சாதனை பட்டியல்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,G.K. Stalin ,B.C. ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...