×

வைரஸ் எச்சரிக்கை

கொரோனா பெரும் தொற்றுக்கு பிறகு பல்வேறு வகை வைரஸ்கள் உருவாகி பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் உடல் நிலையில் ஏற்படும் பாதிப்புக்கு ஒருவித வைரஸ் கிருமிகளே காரணமாக அமைகிறது. இரவு நேரத்தில் நல்ல மழை பெய்கிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதற்கு நேர்மாறாக பகல் வேளையில் கோடைகாலத்தை விட அதிகளவில் வெயில் அடிக்கிறது. இதனால் மக்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டை வறட்சி ஆகியன ஏற்படுகின்றன.

இதை ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தி பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து எளிதில் குணமடைந்துவிடலாம். ஆனால் ஒரு சிலரின் அலட்சியத்தால் வைரஸ் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. இந்த நோய் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவும் தொற்றாக மாறிவிடுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாதம் மட்டுமே தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ரத்த சிகப்பு அணுக்களை அதிகப்படுத்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பார்கள். டெங்கு காய்ச்சல் கண்டவர்களுக்கு பப்பாளி இலை சிறந்த நிவாரணியாக இருப்பதாக கூறுகின்றனர். நோய் வந்த பிறகு அவதிப்படுவதை விட வரும் முன் காப்பது சிறந்தது. அதற்கு ஒரே வழி வீட்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது.

தேவையில்லாமல் உள்ள கொட்டாங்குச்சி, காலி பிளாஸ்டிக் பக்கெட், டயர் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். இந்த தெளிந்த நீரில் தான் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, மக்கள் அனைவரும் வீட்டை சுற்றி தூய்மையை பராமரிக்க வேண்டும். மாசு நிறைந்த சாலைகள், போக்குவரத்து நெரிசல், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இதனால் மாசுக்காற்றில் கலந்துள்ள கிருமிகள் சுவாசிக்கும் போது நமக்குள் செல்லாமல் தடுக்கப்படும். மேலும் சளி, இருமல், காய்ச்சல் உள்ள நோயாளிகளின் அருகில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவர்களிடம் இருந்து வைரஸ் தொற்றும். எனவே அடிக்கடி கைகளை சுத்தமான நீரால் கழுவ வேண்டும். முகத்தையும் கழுவ வேண்டும். தண்ணீரை காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரள-தமிழக எல்லையில் கண்காணிப்பும் மருத்துவ பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தமிழகத்திலும் தீவிரமாக பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் தொற்று நோய் தீவிரமாக பரவாமல் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்படும்.

The post வைரஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Corona pandemic ,
× RELATED கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான...