×

போட்டோ, வீடியோகிராபர்களுடன் சென்று வடிவேலு காமெடி பாணியில் ரவுடிகள் 25 பேர் கைது

சென்னை: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட இடங்களில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் துணை ஆணையர்கள் பாஸ்கர், பாலகிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைத்து ரவுடிகள் வேட்டை நேற்று நடைபெற்றது. ரவுடிகளை பொறுத்தவரை குற்ற சதவீத அடிப்படையில், ஏ+, ஏ, பி மற்றும் சி வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி, ஆவடி மாவட்டத்தில் 522 ரவுடிகளும், செங்குன்றம் மாவட்டத்தில் 593 ரவுடிகள் என மொத்தம் 1115 ரவுடிகள் உள்ளனர். இதுவரை தனிப்படை போலீசார் 539 பேரை கைது செய்துள்ளனர்.

மற்றவர்களை பிடிக்கும் நோக்கில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து, சோதனைகளை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரவுடிகள் வேட்டை நடக்காத நிலையில், கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, ஆவடி மற்றும்
செங்குன்றம் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் ரவுடிகள் வேட்டையை துவங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கொலை வழக்கில் 7 பேர், கொலை முயற்சி வழக்கில் 5 பேர், போதைப்பொருள் வழக்கில் ஒருவர், வழிப்பறி வழக்கில் 4 பேர், பழைய குற்றவாளிகள் 7 பேர் மற்றும் பிடியாணை இருந்தும் போலீசாருக்கு தண்ணி கட்டிய திருவேற்காடு, சென்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நந்தகுமார் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், அம்பத்தூர் காவல் எல்லையில் கொலை வழக்கில் தொடர்புடைய நரேஷ் பாபு, செங்குன்றம் காவல் எல்லையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரிஷி, அன்வர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாகவே, பத்திரிகை போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களையும் அதிகாரிகள் அழைத்துக் கொண்டு ரவுடிகளை பிடிக்க சென்றனர். ஆனால் போட்டோவுக்கு போஸ்கொடுக்கும் அளவுக்கு ரவுடிகள் பிடிபடவில்லை. ஆனால், அதன்பின்னர் ரவுடிகள் 25 பேரை கைது செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபர்களுடன் சென்று ரவுடிகளை போலீசார் முதல் முறையாக பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போட்டோ, வீடியோகிராபர்களுடன் சென்று வடிவேலு காமெடி பாணியில் ரவுடிகள் 25 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadivelu ,CHENNAI ,Aavadi Police Commissioner ,Shankar ,Joint Commissioner ,Vijayakumar ,
× RELATED பிரபா ஒயின்ஷாப் ஓனரா கடையை எப்ப...