×

யுடியூபில் பதிவிட வீடியோ எடுத்த போது கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு: பல்லாவரம் அருகே பரிதாபம்

பல்லாவரம்: பம்மல், பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் அந்தோணி தாஸ். இவர், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுதர்சன் (22), சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், யுடியூபில் தனக்கென தனி பக்கம் வைத்து, அதில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது பிறந்தநாள் என்று கூறப்படுகிறது. அதனை கல்லூரி நண்பர்களுடன் கொண்டாடிய சுதர்சன், நேற்று தனது நண்பரும், தன்னுடன் படிப்பவருமான சாம் (21) என்பவருடன் சேர்ந்து பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள கல்குவாரி பகுதிக்கு சென்றார்.

அங்கு மலைகளின் நடுவே இயற்கை எழில் சூழ்ந்து இருக்கும் காட்சிகளை தனது நண்பருடன் கண்டுகளித்தார். பின்னர், அங்கே இருந்த கல்குவாரி குட்டையை பார்த்ததும் ஆர்வ மிகுதியில் அதன் அருகில் நின்று யுடியூபில் பதிவிடுவதற்காக வீடியோ எடுக்க தொடங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சுதர்சன், தடுமாறி கல்குவாரி குட்டையில் விழுந்தார். நீச்சல் தெரியாத அவர், நீரில் தத்தளித்தவாறு மூழ்க தொடங்கினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.

ஆனால், உதவிக்கு யாரும் வராததால் இதுகுறித்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரின் உதவியுடன் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்குப்பின் சுதர்சன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரி குட்டைகளில் சமீப காலமாக இளம் வயதினர் அதிகளவில் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனால் இதுபோன்று திறந்த நிலையில் இருக்கும் கல்குவாரி குட்டைகளை சுற்றிலும் இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைக்க எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நண்பருடன் வீடியோ எடுக்க வந்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post யுடியூபில் பதிவிட வீடியோ எடுத்த போது கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு: பல்லாவரம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Kalguari ,YouTube ,Pallavaram ,Anthony Das ,Pammal, Ponyamman ,Thambaram Corporation Office ,
× RELATED பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு.....