×

இந்திய இறையாண்மைக்கு கர்நாடகாவால் ஆபத்து: அன்புமணி கண்டனம்

கடலூர்: இந்தியாவின் இறையாண்மைக்கு கர்நாடகாவால் ஆபத்து என அன்புமணி எம்பி தெரிவித்து உள்ளார். பாமக தலைவர் அன்புமணி எம்பி கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னை காவிரி. திட்டவட்டமாக காவிரியில் தண்ணீரை திறந்து விட மாட்டோம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் அதை நாங்கள் மதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயலாக இதை நாங்கள் பார்க்கிறோம். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது. அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்.

ஒன்றிய அரசு இதில் தலையிட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகாவுக்கு சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து பேச வேண்டும். 2 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி கருகி உள்ளது. கூடங்குளம், கல்பாக்கத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம், நெய்வேலியில் தயாரிக்கும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் சேரவேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்தால் என்ன ஆகும். இந்தியாவின் இறையாண்மைக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் கர்நாடகாவால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்திய இறையாண்மைக்கு கர்நாடகாவால் ஆபத்து: அன்புமணி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Anbumani ,India ,PMK ,Cuddalore ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு