×

சேலம்காரர் தலைமையில் இருக்கும் கட்சியினர் வேறு கட்சிக்கு தாவ இருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘புது தலைவர் கட்சிக்கு வந்தால் உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்துள்ளதாமே, எந்த கட்சியில்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் புதிய தலைவரான சேலத்துக்காரர் மம்மி இருந்தப்போ, ஒன்றரைகோடி தொண்டர்கள் கட்சியில் இருந்தார்கள். அதனை நான் இரண்டரை கோடியாக உயர்த்தப்போறேன் என சபதம் போட்டு வேலையை செஞ்சிக்கிட்டு இருக்காராம். இதற்காக ரெண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை போட்டு கட்சியை வளர்க்கவும் திட்டம் வைத்துள்ளாராம். இதற்காக மாவட்ட செயலாளராக இப்போது இருப்போரிடம் உங்களுக்கு பிடித்தவர்களின் பெயரை கொடுங்கன்னு சேலத்துக்காரர் கேட்டிருக்காராம்.
மாங்கனி மாவட்டத்துல அவரது நிழலானவரிடம் மட்டும் எட்டு தொகுதி இருக்காம். இதில் அவருக்கு வேண்டப்பட்டவருக்கு தான் பொறுப்பை கொடுத்தாகணுமுன்னு சொல்லி இருக்காராம். அவர் கொடுத்திருக்கும் பட்டியல் பெயரை கேட்டாலே இலைக்கட்சி நிர்வாகிகள் ரொம்பவே கடுப்பு மூடுக்கு மாறிடறாங்க. அதுவும் எம்எல்ஏ தேர்தலில் அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அப்படியே சீட் ஒதுக்கப்படும் எனவும் சொல்லப்படுதாம். இதனால கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் அதிர்ச்சியில இருக்காங்க. காலம் காலமா கட்சிக்காக உழைப்போருக்கு எந்த பதவியும் கொடுக்கல. அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கூட்டுறவு தலைவர் பதவியெல்லாம் கொடுத்து வளர்த்துட்டாராரு. மம்மி இருக்கும் போது கட்சியின் உயர்ந்த பதவியும் அடிமட்ட தொண்டருக்கு கிடைக்குமுங்குற நம்பிக்கை இருந்தது. ஆனா சேலத்துக்காரரின் வேலையை பார்த்தா இனி அது நடக்காது. இப்படியே போனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக கோடிகளில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை விரைவில் லட்சத்தை எட்டினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை…’’ என்று சொன்னார் விக்கியானந்தா.

‘‘ ராஜதந்திரம் தெரியாமல் ‘கிப்ட்’காரரிடம் மாட்டிய தேனிகாரரின் நிலையை சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்தில் தேனிக்காரர், கிப்ட்காரர் இணைந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினாங்க. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தது எங்கள் தரப்பு கூட்டம்தான் என்று இருதரப்புமே பெருமையாக பேசினாங்களாம். சேலத்துக்காரர் அணியினரோ, இவங்க ஒண்ணு சேர்ந்து சேர்த்த கூட்டமே இவ்ளோதான்னா, தனிச்சு நின்று கூட்டத்தைக் காட்டுனா எவ்வளவு இருக்கும்னு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இது ஒருபுறமிருக்க, ‘கிப்ட்’காரரை மறுபடியும் ஹனிபீ மாவட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் நிற்க வைக்கும் திட்டத்தில்தான், இந்த இணைப்பிற்கே ஒத்துக் கொண்டிருக்கிறோம் என அவரது ஆதரவாளர்கள், பார்ப்போரிடம் எல்லாம் ரகசியத்தை வெளிப்படையாக பரப்பி வர்றாங்களாம். எப்படியாவது மறுபடியும் கிப்ட்காரர் ஹனிபீ பாராளுமன்ற தொகுதியில் நின்னா, ஏற்கனவே அவருக்கு இருந்த பழைய செல்வாக்கை உயிர்ப்பித்து ஜெயிக்க வைத்துவிடலாம் என்று அவரது அடிபொடிகள் சொன்னாங்களாம். இந்த தகவல் தேனிக்காரரின் காதுகளுக்கும் எட்டியதாம். தேவையில்லாமல் நாமளே வான்டடா கிப்ட்காரரை நம்ம ஏரியாவுக்கு கொண்டு வந்திட்டோமோ என்று தேனிகாரர் இப்போது புலம்புகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘100 நாள் வேலையில தொட்டதுக்கு எல்லாம் கமிஷன் வாங்குறது எந்த மாவட்டம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின் பேட்டை மாவட்டத்துல, லி என்ற எழுத்துல முடியும் ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல 47 ஊர் ஆட்சி இருக்குது. இந்த ஊர் ஆட்சிகள்ல வாரத்துக்கு 6 நாளைக்கு 100 டேஸ் ஒர்க் செய்றாங்க. அவங்ககிட்ட பணி தள பொறுப்பாளருங்க வாரத்துக்கு 100 வசூல் செய்றாங்களாம். அதோட பொதுமக்கள் செய்ய வேண்டிய வேலைய, பொக்லைன் இயந்திரம் மூலம் குறைந்த அளவிற்கு பணிகளை செய்து கொண்டு மீதி பணத்தை மேல் அதிகாரிங்களும் பணித்தள பொறுப்பாளர்களும் பங்கு பிரிச்சுக்குறாங்களாம். இதுல, குப்பம் என்று முடியுற கிராமத்துல பணிபுரியுற, பணித்தள பொறுப்பாளரு, சம்திங் வாங்கிக்குறாராம். மேலும் புதுசா 100 டேஸ் அட்டை வழங்குறதுக்கும் கமிஷன், வேலை செய்யும் போது சீக்கிரம் வீட்டுக்கு போகணும்னா? அதுக்கு கமிஷன், அப்படின்னு ஒவ்வொன்னுத்துக்கும் தனி, தனி கமிஷன் வாங்குறாங்களாம். இப்படி தொட்டதுக்கு எல்லாம் கமிஷன் வாங்குறாங்களேன்னு பொதுமக்கள் புலம்பித்தீர்க்குறாங்க. இவங்க மேல மாவட்ட உயர் அதிகாரிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்குது.

‘‘சேலத்துக்காரர் அணிக்கு தாவ ரெடியாக இருப்பது எந்த அணியினர்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒரு காலத்தில் டெல்டாவில் கோலோச்சிய வைத்தியானவரிடம் தற்போது இருந்து வரும் சொச்சம் பேரும் சேலத்துக்காரரிடம் ஐக்கியமாக முடிவு செய்து விட்டார்களாம். தேனிகாரரையும், டெல்டா காரரையும் இனியும் நம்பி பயனில்லை. ஏற்கனவே அடி மேல் அடி கிடைத்து விட்டது. எனவே இனியும் காலம் தாமதம் செய்யாமல் சேலத்துக்காரரிடம் அணி தாவ முடிவு செய்து விட்டார்களாம். இந்த தகவல் டெல்டாகாரர் காதுக்கு செல்ல அவர் பொறுமையாக இருங்கள் என்றாராம். டெல்டாகாரரிடமிருந்து சேலத்துகாரரிடம் ஐக்கியமான டெல்டா மாவட்ட நிர்வாகிகள் டெல்டாகாரரை கட்சியில் சேர்க்க கூடாது என போர்கொடி தூக்கி உள்ளனராம். அப்படியே சேர்த்தாலும் அவர் டெல்டா வில் அரசியல் செய்ய கூடாதாம்.. மாநில பொறுப்பை வழங்கி சென்னைக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் சேர்க்க வேண்டும் என ஒட்டுமொத்த குரலாக ஒலித்து வருகிறதாம்… இதனால் இன்னும் மாவட்ட செயலாளர்கள் பதவி காலியாக வைத்திருப்பதாக பேசிக் கொள்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post சேலம்காரர் தலைமையில் இருக்கும் கட்சியினர் வேறு கட்சிக்கு தாவ இருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Wiki ,Yananda ,Salemkarar ,Uncle ,Peter ,wiki Yananda ,
× RELATED எம்பி தேர்தல் நடக்க இருக்கும்...