×

மழைநீர் வடிகால்களில் திருட்டுத்தனமாக ெகாடுத்தது சென்னையில் 50 ஆயிரம் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு: களஆய்வுக்குப் பின் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சென்னை, செப்.14: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடத்திய கள ஆய்வில் மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே திருட்டுத்தனமாக கொடுக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மாநகரம் சமதள பரப்பினை கொண்டுள்ளதால் சாலைகளில் மழைநீர் தேங்குவது சென்னை மக்களின் நீண்டகால பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கு காரணம், சென்னை மாநகரத்தின் சராசரி நிலத்தின் மட்டம், குறைந்தபட்ச கடல் மட்டத்திற்கு 2 மீட்டர் மேலே மட்டுமே உள்ளது. இவ்வாறு நிலப் பரப்பு சம தளமாக உள்ளதாலும், கடல் அலைகளின் தாக்கத்தினாலும், சென்னை மாநகரத்தில் மழைக் காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதும், வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது.

எனவே, தாழ்வான பகுதிகளையும் மற்றும் வெள்ளப் பாதிப்பிற்கு உட்படும் பகுதிகளையும் பாதிப்பிலிருந்து மீட்க மழைநீர் வடிகால் கட்டமைப்பு மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் சென்ைனயே மிதக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது. இதை மாற்றி காட்டுவோம் என்ற வாக்குறுதியுடன் திமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கக் கூடாது என்ற நோக்கத்துடன் கடந்த ஆண்டு சென்னை மாநகரப் பகுதிகள் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நல்ல பலன் கிடைத்தது. மழைநீர் அனைத்தும் உடனுக்குடன் வடிந்தது சென்ைன மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனவே, சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், முறையாக கழிவுநீர் இணைப்பு பெறாமல் பலர் இரவோடு இரவாக மழைநீர் வடிகால்களை சேதப்படுத்தி நிலத்துக்கு அடியில் ஆங்காங்கே திருட்டுத்தனமாக கழிவுநீர் குழாய்களை இணைத்து வருகின்றனர். இதுபோன்று மழைநீர் வடிகால் மற்றும் கால்வாயில், சட்டவிரோதமாக கழிவுநீரை விடுவது தொடர்கிறது. இதனால், கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எட்ட முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், கழிவுநீரால் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் குறிப்பிட்ட அந்த பகுதிகளில் கழிவுநீர் தேங்குகிறது. இதுபோன்ற பாதிப்பு ஏற்படும் போது தான் அவற்றை கண்டறிய முடியும். நிலத்துக்கு அடியில் இருப்பதால் அதிகாரிகள் கவனத்துக்கு வரும் போது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களே தங்கள் தவறை உணர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று சென்னை மாநகராட்சி தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

அதன்படி, மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக வரும் புகார்களின் அடிப்படையில், அதிகாரிகள் தொடர்ந்து கள ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வுகளில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக 49,394 கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அதிரடியாக துண்டிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நிலத்துக்கு கீழ் சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்பவர்களால் மழைநீர் வடிகாலும் சேதமடைகிறது. அதோடு மட்டுமல்ல, வேறு பணிகளுக்கு சாலைகளை தோண்டும் போது முறைகேடாக பதிக்கப்பட்ட குழாய்களால் சம்பந்தப்பட்ட பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இல்லாவிட்டால் அந்த பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க முடியாது. ராயப்பேட்டை செல்ல பிள்ளையார் கோயில் தெரு, எஸ்பிளனேடு சாலை, அசோக் நகர் பிருந்தாவன் தெரு, ராமாபுரம், அன்னை சத்யா நகர் போன்ற இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் இதுபோன்ற சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, மழைநீர் வடிகால்களை அதிக அளவில் சேதப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வீடு களுக்கான இணைப்புகள் தான் அதிகம் உள்ளது. முறையாக குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து கழிவு நீர் இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி பெறாத கட்டிடங்களால் பாதிப்பு
வடிகாலில் கழிவுநீர் விடும் காரணங்கள் குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அனுமதி பெறாமல் கட்டப்படும் வீடு, கடை உரிமையாளர்கள், சட்டவிரோதமாக கழிவுநீரை வடிகாலில் விடுகின்றனர். அடைப்பு, நீரோட்டம் தடை காரணமாக, குழாயை மாற்ற வேண்டி இருந்தால், அதை செய்யாமல் இணைப்பை வடிகாலில் விடுகின்றனர். புதிய கட்டுமானங்கள் நடைபெறும்போது, அங்குள்ள ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவுநீரை, வடிகாலில் விடுகின்றனர். இதுபோன்ற காரணங்கள் தான் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்கு காரணமாகிறது’’ என்றனர்.

முழு பணிகளும் 2026க்குள் முடிக்கப்படும்
சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் கூறுகையில், ‘‘எங்கெங்கு கழிவுநீர் இணைப்புகள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு கழிவுநீர் இணைப்புகளை உடனுக்குடன் கொடுத்து வருகிறோம். புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அங்கும் 50 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. மற்ற பகுதிகளில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் 2026ம் ஆண்டுக்குள் முழுவதுமாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிடும்’’ என்றார்.

The post மழைநீர் வடிகால்களில் திருட்டுத்தனமாக ெகாடுத்தது சென்னையில் 50 ஆயிரம் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு: களஆய்வுக்குப் பின் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...