×

திருத்துறைப்பூண்டியில் அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, செப். 14: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயலலிதா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் பாலமுருகன், தமிழ்ச்செல்வி, முகமது ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சிவராமன் வரவேற்றார். மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் அறிவழகன் பேசியதாவது: கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி. தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு பறை இசைத்தல், சைகை மொழிகள் எனப் பல வகைகள் பயன்படுத்தப்பட்டு பின்பு மொழிகள் உருவானபோது, ஆதி மொழியாக தமிழ் மொழி இருந்துள்ளது. உலகில் தோன்றிய மொழிகளிலே மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. சிறப்புமிக்க தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசானது ஒவ்வொரு பள்ளிகளிலும் இலக்கிய மன்ற அமைப்பை ஏற்படுத்தி பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழியின் பெருமைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கோடு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் மாணவர்கள் தமிழ் அறிவை வளப்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான கதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள் படைப்பதற்கு இலக்கிய மன்றங்கள் உறுதுணையாக உள்ளன என்றார். அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாஸ்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

The post திருத்துறைப்பூண்டியில் அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Thiruthaurapoondi Government Boys Higher Secondary School ,Literary Forum.… ,Thiruthaurapoondi Government School ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ்...