முத்துப்பேட்டை, செப். 14: முத்துப்பேட்டையை அடுத்த ஆரியலூர் ஊராட்சி கடுவெளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடுவீடாக சென்று சர்க்கரை, ரத்தக்கொதிப்பு நோயாளிகளை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. தமிழக அரசின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், வீடு வீடாக சென்று சர்க்கரை, ரத்தக்கொதிப்பு நோயாளிகளை கண்டறிதல், அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை தன்னார்வலர்கள் மூலம் கொடுப்பது, இடைநிலை சுகாதார பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு செய்வது போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
மேலும் வீட்டைவிட்டு வெளிய செல்ல முடியாத நிலையில் உள்ள கை, கால் செயலிழந்த நோயாளிகளுக்கு, பிசியோதெரபி மருத்துவர், செவிலியர் நேரடியாக வீட்டுக்கே சென்று, சிகிச்சை அளிப்பது ஆகிய பணிகள் இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. மேலும், காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், கிராமங்களுக்கு சென்று, மக்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து, பாசிட்டிவ் அறிகுறியுள்ள நோயாளிகளை, கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சிகிச்சைக்குப்பின் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் முத்துப்பேட்டையை அடுத்த மாங்குடி ஊராட்சி மற்றும் ஆரியலூர் ஊராட்சி, கடுவெளி கிராமத்தில் திருவாரூர் துணை இயக்குநர் சுகாதார பணிகள், டாக்டர் ஹேமச்சந்த காந்தி, துணை இயக்குநர் (காசநோய்) புகழ் ஆகியோர் உத்தரவுப்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் மேற்பார்வையில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடுவீடாக சென்று சர்க்கரை, ரத்தக்கொதிப்பு நோயாளிகளை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் மணிகண்டன் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
The post முத்துப்பேட்டை அருகே கடுவெளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம் appeared first on Dinakaran.
