×

அடுத்த மாதம் அமலாக இருந்த நிலையில் மாற்றம்; கார்களில் 6 ஏர்பேக் கட்டாயமில்லை: நிதின் கட்கரி திடீர் தகவல்

புதுடெல்லி: வரும் அக்டோபர் மாதம் முதல் அமலாக்கப்படுவதாக இருந்த, கார்களில் 6 ஏர்போக்குகள் பொருத்தும் விதிமுறையை அரசு கட்டாயமாக்காது என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்தியாவில் வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், கார்களில் ஏர் பேக்குகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. காற்றடைத்த பைகளான இந்த ஏர் பேக், விபத்தின் போது உடனடியாக விரிவடைந்து பயணிகளை பாதுகாக்கும்.

இதன்படி, கடந்த 2019 ஜூலை 1ம் தேதி முதல், காரின் டிரைவர் இருக்கையில் ஏர் பேக் இருப்பதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. அதைத் தொடர்ந்து, டிரைவருக்கு அருகில் உள்ள முன்பக்க சீட்டிலும் ஏர் பேக் இருப்பதை கடந்த 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயப்படுத்தியது. இந்நிலையில், கார்களின் பின்சீட்டிலும் பாதுகாப்பை அதிகரிக்க மொத்தம் 6 ஏர் பேக் அமைக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கார்களில் 6 ஏர் பேக் அமைக்க வேண்டுமென்ற நடைமுறை கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி அமல்படுத்தப்பட இருந்தது.

பின்னர் ஓராண்டு ஒத்திவைத்து, 2023 அக்டோபர் முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் வரைவு அறிக்கை வெளியிட்டது. இதில், அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் கார்களில் 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டிய கட்டாயம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘கார்களுக்கு 6 ஏர் பேக் விதியை கட்டாயமாக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில் மக்கள் ஏற்கனவே போதிய எச்சரிக்கையுடன் உள்ளனர்.

இப்போது எந்த கார் நிறுவனமும் 6 ஏர் பேக்களை அமைத்தால் மக்கள் அதை விரும்பி வாங்குவார்கள். எனவே இந்த விஷயத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம்’’ என கூறி உள்ளார்.
நடுத்தர விலை கார்களில் 6 ஏர் பேக்குகள் அமைத்தால் செலவு அதிகரிக்கும் என கார் உற்பத்தி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் கட்கரி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அடுத்த மாதம் அமலாக இருந்த நிலையில் மாற்றம்; கார்களில் 6 ஏர்பேக் கட்டாயமில்லை: நிதின் கட்கரி திடீர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nidin Katkari ,New Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...