×

காவல் துறையின் பிடியில் இருந்து தப்ப கட்சி நிர்வாகியை பலிகடாவாக்கிய சேலம்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலைக்கட்சியில் சாதாரண நிலையில் இருந்து கோட்டீஸ்வரரான நிர்வாகியை யார் கட்சியில் இருந்து தூக்கினாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்துல இலைக்கட்சி தலைவரின் தொகுதியில் பெயர் சொல்லும் அளவில் 2ம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லையாம். அப்படி தன்னிடம் உள்ளூர் நபரை வைத்து கொண்டால் சொந்த காசில் சூன்யம் வைத்த கதையாகிவிடும் என்பதில் தெளிவாக உள்ளாராம். உள்ளூர் ஆட்களை ஊறுகாய் போலதான் மாங்கனி மாவட்டத்தில் சேலம்காரர் பயன்படுத்துகிறாராம். இந்நிலையில் தனக்கு ரொம்ப நெருக்கமாக இருந்த ஒருவரையே கட்சியில இருந்து தூக்கிட்டாராம். நீக்கப்பட்ட சாமி பெயரை கொண்டவரு ஆரம்பத்தில் சாதாரண தொண்டராகத்தான் இருந்தாராம். அவரை வசதியின் உச்சிக்கு கொண்டுபோனது மட்டுமல்லாமல் கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளையும் வழங்கினாராம். அவரின் திட்டப்படி சாமியானவரின் செல்வாக்கை வைத்து ஓட்டு வாங்கின பிறகு தன்னை பற்றியோ, தன் நடவடிக்கை பற்றியோ எந்த தகவலும் வெளியே வரக்கூடாது என்பதற்காக இலை கட்சி தலைவர் விரித்த வலையில் சிக்கிட்டாராம். அதன்படி, நகர நிர்வாகி ஒருவரை பொறுப்பிலிருந்து நீக்ககோரி கடிதம் பெறுமாறு இலைக்கட்சியின் உறவினர் கூறினாராம். இலை கட்சியின் தலைமையே சொல்லிவிட்டது என்று சாமியும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய கடிதம் தந்தாராம். ஆனா, சாமி மற்றும் இன்னொரு நபரை கட்சியில் இருந்து கட்டம் கட்டி தூக்கிட்டாங்களாம். ஆனா இன்னொரு முக்கியமான விவகாரமும் சேலத்துல ஓடிட்டு இருக்காம். இலைக்கட்சி ஆட்சியின்போது தமிழ்நாட்டில் எங்குமில்லாத வகையில் அந்த தொகுதியில ரோடு சூப்பராக போட்டாங்களாம். ரிங் ரோடு அமைப்பதற்கு இடம் பார்த்தபோது 60 ஏக்கர் நிலத்தை முக்கிய புள்ளிக்கு அந்த சாமி முன்நின்று வாங்கிக் கொடுத்தாராம். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு 250 கோடி இருக்குமாம். இதுபோன்ற வில்லங்க விவகாரங்களை தெரிந்தவராம் இந்த சாமி. இவரை திடீரென நீக்கிட்டா, போலீஸ் பார்வை நம்மை விட்டு விலகுமுங்குற தந்திரம்தான் சேலம்காரரின் தந்திரம் என்கிறார்கள் இலை கட்சியின் ஆதரவாளர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குக்கர் கட்சியுடன் தொடர்பை துண்டிக்க வேண்டும் என்ற சவுண்ட் நெற்களஞ்சிய மாவட்டத்தில் இருந்து அதிகம் கேட்கிறதாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ குக்கர் தலைமையுடன் தேனிக்காரர் கூட்டணி வைத்த பின்னர் நெற்களஞ்சிய மாவட்டத்துக்கு குக்கர்காரர் திடீரென விசிட் அடித்தாராம். தனது ஆதரவாளர்களையும், கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினாராம். இந்த ஆலோசனையின் போது மனுநீதி சோழன் மாவட்ட மாஜி அமைச்சரும், கடலோர மாவட்ட மாஜி அமைச்சர் பெல் ஆகியோரின் நடவடிக்கைளை ரகசியமாக புள்ளிவிவரங்களுடன் பெற்றாராம். நம்மிடம் இருக்கும் நிலையில், குக்கர்காரர் ஏன் தனித்து போட்டி என்று அறிவிக்கணும். இதில் சூது இருக்கு… நம்மளை தனியாக கழட்டிவிட்டுட்டு நம்ம ஆட்களை திசை திருப்பும் தந்திரம் என்பதை தேனிகாரர் லேட்டாக உணர்ந்தாராம். எனவே, தேனிகாரரை சந்தித்த அவரின் விசுவாசிகள், குக்கரை நம்பாதீங்க தலைவரே அவரு நம்மை கழட்டிவிட்டுட்டு கரன்சி, அதிகாரம் யார் பக்கம் இருக்கோ, அங்கே சாய்ந்துடுவாரு… தேர்தல் நேரத்தில் நம்மை கழற்றி விடுவார். எனவே, குக்கர்காரர் நம்மை கழட்டிவிடும் முன்பு நாம அவரையும், அவரது கட்சியையும் இப்போதே கழட்டிவிட்டால், நாடாளுமன்ற தேர்தலில் சாதிக்கலாம்னு சொன்னாங்களாம். இவற்றை அமைதியாக கேட்ட தேனிக்காரர் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளாராம். அதற்குள் குக்கர்காரரை கழட்டி விட வேண்டும் என நெற்களஞ்சிய மாவட்டத்தில் தேனிக்காரரின் நெருங்கிய ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் போர்க்கொடி தூக்கி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ இலை கட்சியில் இருந்து லீக் ஆன வீடியோ ஒன்று நிர்வாகிகளை கலக்கிட்டு இருக்காமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள விஐபி ஒருவரை பற்றிய ‘ஹோமோ’ வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் ஆக்ரமித்தது. இது ‘புரோமோ’தான் ‘மெயின் பிக்சர்’ இன்னும் நிறைய இருக்கிறது என்கிறது இலை கட்சி வட்டாரங்கள். அந்த விஐபியின் ஓட்டுநராக பணியாற்றிய ஒருவரே இதன் கதாநாயகனாம். அவரே எல்லாவற்றையும் ‘ஷூட்’ செய்து வைத்துவிட்டு வீடியோவை காட்டி அன்பாக மிரட்டி விஐபியிடம் பல லட்சங்களையும் கறந்துட்டாராம். இப்போது இலைகட்சியில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற உள்ள நிலையில் அண்ணனின் பெயரை கெடுக்க இவ்வாறு வீடியோவை லீக் செய்துள்ளனர் என்கின்றனர் விஐபியின் ஆதரவாளர்கள். அடுத்தடுத்த வீடியோக்களும் வர வாய்ப்பு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும் சிலர் கிலியில் இருக்காங்களாம். ஆனால் இத்தனை நாளும் அமைதியாக இருந்தவரை உசுப்பேற்றி இப்போது வீடியோவை வெளியிட மூளையாக செயல்பட்டது யார் இலை கட்சியின் கன்னியாகுமரி விஐபி ஆராய்ந்து கொண்டுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பிரதமர் வீடு கட்டும் திட்டத்துல புரோக்கர்கள் புகுந்து என்ன செய்யறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்ற பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வெயிலூர் மாவட்டத்துல அதிகாரிங்க காட்டுல பண மழை பெய்யுதாம். இதற்காக அவர்கள் புரோக்கர்கள் பட்டாளத்தையே கையில் ைவத்து கொண்டு கலெக்‌ஷன்ல கலக்கிட்டு வர்றாங்களாம். வீட்டுமனை பட்டா வைத்திருப்பவர்கள், இடிந்து சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு தங்கள் இடத்தில் புதிய வீடு கட்ட இயலாதவர்கள் என அடித்தட்டு மக்கள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.2.67 லட்சம் மானியம் பெறலாம். இந்த மானியத்தைதான் அப்படியே லபக்கும் வேலையில புரோக்கருங்க மூலம் அதிகாரிங்க ஈடுபட்டுள்ளார்களாம். அதாவது வசதிப்படைத்தவங்க வீடு கட்டிக் கொண்டிருந்தா அவர்களை அணுகி, இத்திட்டத்தில் இணைத்து மானியத்துல 5ல் ஒரு பங்கை அவர்களுக்கு அளித்து விட்டு, புரோக்கர்களுக்கும் கமிஷனை கொடுத்துவிட்டு மீதியை அப்படியே அதிகாரிங்க அமுக்கிவிடுறாங்களாம். அடித்தட்டு மக்கள் வீடு கட்ட மானியம் கேட்டு வந்தாலும் கமிஷன் கேட்டு அதிகாரிங்க ஒத்த கால்ல நிக்குறாங்களாம்… இந்த சம்பவம் வீடு வாங்க, கட்ட நினைக்கும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல்னு கண்டன குரல்கள் வெயிலூர்ல எழுந்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post காவல் துறையின் பிடியில் இருந்து தப்ப கட்சி நிர்வாகியை பலிகடாவாக்கிய சேலம்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Peter Uncle ,Mangani ,Salemgarr ,Department of the Guard ,wiki Yananda ,
× RELATED மாங்கனிக்கு பெயர் போன சேலம் மக்களவை தொகுதியை வசியப்படுத்தப்போவது யார்