×

வீட்டு லோன் கட்டி முடித்த பிறகு 30 நாளில் பத்திரத்தை ஒப்படைக்காவிட்டால் தினமும் ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

மும்பை: சொந்த வீடு வாங்குவோர், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குகின்றனர். அப்போது வீடு பத்திரப்பதிவின்போது வழங்கப்படும் ஒரிஜினல் பத்திரத்தை கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்ளும். கடைசி தவணையை கட்டி முடித்த பிறகு ஒரிஜினல் வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை, திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஆனால், சில வங்கிகள் பத்திரத்தை திருப்பித் தருவதில் கால தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் விதமாக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு புதிய உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள், கடன் தொகையை முழுவதுமாக கட்டி முடித்த பிறகு, அந்தத் தேதியில் இருந்து 30 நாட்களுக்கள் வாடிக்கையாளர்களிடம் பெற்ற அசையும் மற்றும் அசையாச் சொத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம், தாமதம் ஆகும் நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.5,000 வீதம் கணக்கிட்டு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாகத் தர வேண்டும். இந்த உத்தரவு இந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

இதுபோல், வாடிக்கையாளர்கள் தங்களது ஒரிஜினல் பத்திரத்தை வங்கியில் இருந்தோ அல்லது கடன் வாங்கிய கிளையில் இருந்தோ பெற்றுக் கொள்வதற்கான விருப்பத் தேர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். எந்த தேதியில், எந்த இடத்தில் ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விவரத்தை, கடன் வழங்குவதற்கான உத்தரவாத கடிதத்திலேயே வங்கிகள் குறி்ப்பிட வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வீட்டுக் கடன் மட்டுமின்றி ஆவணங்களை அடமானம் வைத்து பெறப்படும் தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.

The post வீட்டு லோன் கட்டி முடித்த பிறகு 30 நாளில் பத்திரத்தை ஒப்படைக்காவிட்டால் தினமும் ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...