×

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் டெங்குவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி காயத்ரி ( 19 ) என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் கல்லூரி மாணவி காயத்ரிக்கு டெங்கு இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதய நோயும் சேர்ந்து கொண்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மாணவி உயிரிழந்தார். கல்லூரி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியை பொறுத்தவரை கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை 820 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஆண்டு படிப்படியாக அதிகரித்து 1,200 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை காலத்திற்கு முன்பே புதுச்சேரியில் டெங்கு நோய் பரவ தொடங்கியுள்ளது. வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. கல்லூரி மாணவி வசித்து வந்த வீட்டில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...