×

கூடலூர் நகராட்சி மன்றத்தில் அவசர கூட்டம் ஒப்பந்ததாரருக்கு ஆதரவு கவுன்சிலர்களிடம் தூய்மை பணியாளர்கள் கடும் வாக்குவாதம்

கூடலூர் : கூடலூர் நகராட்சியின் அவசர மன்ற கூட்டத்தில், ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக கடிதம் அளித்த கவுன்சிலர்களிடம் தூய்மை பணியாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியின் அவசர மன்றக்கூட்டம் நகர் மன்றத்தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையர் பிரான்சிஸ் சேவியர், துணை தலைவர் சிவராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இப்பிரச்னை குறித்து துணை தலைவர் சிவராஜ், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், வெண்ணிலா, சத்தியசீலன், லீலா வாசு, ராஜீ உள்ளிட்டோர் பேசினர். அப்போது, ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்காமல் அவர்களின் சேமநல நிதி போன்றவற்றை முறைப்படுத்தாமலும் உள்ளது.
இதனால் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் தூய்மை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து மன்ற கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த டெண்டரை புதிய நபர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே இந்த ஒப்பந்தத்தை சரியான வேறு ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டும்.

இப்பணிகளுக்காக கடந்த மாதம் 18ம் தேதி புதிதாக விடப்பட்ட டெண்டரில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட 5 சதவீதம் குறைவாக, அனைத்து நிர்ப்பந்தங்களுக்கும் உட்பட்டு ஒப்பந்தப்புள்ளி வழங்கியவரின் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய நபருக்கே ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் உள்ளது. இது நகராட்சி விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக 7 பெண் கவுன்சிலர்கள் உள்பட 10 கவுன்சிலர்கள் மன்றத்தில் கடிதம் வழங்கினர். இதனால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எவ்வித முடிவும் ஏற்படாமல் மன்ற கூட்டம் முடிவடைந்தது. அப்போது, சரியாக பணியாற்றாத ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக ஏன் கடிதம் அளித்தீர்கள்? என எதிர்ப்பு தெரிவித்து, ஆதரவு கவுன்சிலர்களை நகராட்சி வாயிலில் தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தில் கடும் சொற்கள் வீசப்பட்டதால் சிறிது நேரம் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கூடலூர் நகராட்சி மன்றத்தில் அவசர கூட்டம் ஒப்பந்ததாரருக்கு ஆதரவு கவுன்சிலர்களிடம் தூய்மை பணியாளர்கள் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Municipal Forum ,Cuddalore ,Cuddalore Municipality ,Municipal Forum ,
× RELATED பாதாள சாக்கடையில் ஆட்கள் இறங்கி...