×

ஐந்தாவது முறையாக புகுந்தன தெள்ளாந்தியில் வாழை தோட்டத்தை குறிவைக்கும் யானை கூட்டம்

*200 வாழைகள், தென்னைகள் கபளீகரம், விரக்தியில் விவசாயிகள்

பூதப்பாண்டி : பூதப்பாண்டியை அடுத்துள்ள தெள்ளாந்தி உடையார் கோணம் பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்கள் தொடர்ந்து ஐந்தாவது முறையாக யானை கூட்டத்தால் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் வேறு வழிதெரியாமல் தவித்து வருகின்றனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாடகை மலை அருகேயுள்ள உடையார் கோணம் அருகே வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.

சில விவசாயிகள் தங்களது சொந்த இடத்திலும் பலர் குத்தகை எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர். அதன் அருகே தென்னந்தோப்புகளும் நிறைய உள்ளன. கடந்த சில வருடங்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மற்றும் வாழை மரங்களை அழித்து வருகின்றன. அந்த பகுதி விவசாயிகளும் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் இடத்தை பார்வையிடுவதுடன் யானை கூட்டங்களை வெடி வெடித்து விரட்டியும் வந்தனர்.

என்றாலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் யானை கூட்டம் தாடகை மலையடிவாரத்தில் உள்ள தெள்ளாந்தி, திடல், காட்டு புதூர் மற்றும் கீரிப்பாறை போன்ற பகுதிகளில் பயிர்களை அழிப்பது வழக்கமாகி வருகிறது. ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி மற்றும் கோயிலுக்கு சென்ற பெண் ஆகியோர் யானை தாக்கி இறந்ததும் சுதாரித்துக் கொண்ட வனத்துறை யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அகழிகள் மற்றும் சோலார் மின்வேலி போன்றவைகளை அமைத்தனர். இவ்வாறு யானைகள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை செய்து வந்தனர்.

ஆனால் அதையும் தாண்டி யானை கூட்டம் உடையார் கோணம் தோவாளை சானல் மேல் பகுதியில் உள்ள பாலம் வழியாக வயல்களில் புகுந்து வாழை மற்றும் தென்னையை அழிக்க துவங்கியது. பின்னர் வனத்துறை அந்த பாலத்தின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டினர். இனி யானைகள் வருவதற்கு பாதையே கிடையாது என விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வந்த யானை கூட்டம் பாலத்தின் மேலே கட்டிய தடுப்பு சுவரை இடித்து தள்ளிவிட்டு உடையார் கோணம் பகுதியில் குலை தள்ளிய சுமார் 200க்கும் மேற்பட்ட வாழைகளையும், 10 தென்னை மரங்களையும் அழித்து சென்றன.

நேற்று காலையில் வழக்கம் போல் வயல்களுக்கு சென்ற விவசாயிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், பயிர்களை நோய் வராமல் மட்டுமே எங்களால் பாதுகாக்க முடியும். இயற்கை சீற்றமான மழை, ெவயில், புயல் மற்றும் இது போன்ற வன விலங்குகளால் சேதம் அடைவதை ஒன்றும் செய்ய முடியாது. இனி வாழை விவசாயத்தை விட்டு விட வேண்டியதுதான் என வேதனை தெரிவித்தனர்.

சுவர் உடைப்பு

உடையார்கோணம் பகுதியில் யானைக்கூட்டம் 5வது முறையாக புகுந்துள்ளது. ஏற்கனவே 3 முறை புகுந்த நிலையில் கடந்த மே மாதம் 4வது முறையாக புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதையடுத்து தோவாளை சானல் பாலத்தில் கடந்த மே மாதம் தடுப்புசுவர் கட்டப்பட்டது. தற்போது யானைக்கூட்டம் அந்த சுவரை உடைத்து விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளன.

The post ஐந்தாவது முறையாக புகுந்தன தெள்ளாந்தியில் வாழை தோட்டத்தை குறிவைக்கும் யானை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Bukundana Telandi ,Bhootapandi ,Telandi ,Wodeyar Konam ,
× RELATED பூதப்பாண்டி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்