×

தமிழக-கர்நாடக மாநில எல்லையில் ஒரே வாரத்தில் 6 வீடுகளில் ₹1 கோடி நகை, பணம் கொள்ளை

*போலீசார் தீவிர விசாரணை

ஓசூர் : தமிழக- கர்நாடக மாநில எல்லை ஆனேக்கல் பகுதியில், கடந்த ஒரு வாரத்தில் 6 வீடுகளில் சுமார் ₹1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அடுத்த ஆனேக்கல் தாலுகா, சாய் கார்டன் சூர்யா நகர் மற்றும் ஓசூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதிகளில், கடந்த ஒரே வாரத்தில் 6 வீடுகளில் இரவு நேரத்தில் சுமார் ₹1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

சாய்கார்டன் பகுதியை சேர்ந்த லோகேஷ், மங்களூருவில் படித்து வரும் மகளை பார்க்க குடும்பத்துடன் சென்றிருந்த சமயத்தில், வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் நகைகள் திருடி சென்றுள்ளனர். இந்த தொடர் திருட்டு குறித்து புகார்களின் பேரில், ரூரல் எஸ்,பி. மல்லிகார்ஜூனா பாலதண்டி சம்பவ இடங்களுக்கு நேற்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடந்த ஒருவார காலமாக ஆனேக்கல் சுற்றுவட்டார பகுதிகளில், 6 வீடுகளில் ₹1 கோடி மதிப்புள்ள நகைகள், பணம் திருடு போயுள்ளது. இதுகுறித்து திருடு போன வீடுகள், அருகில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் பாதுகாப்பிற்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பெற்று, விசாரணை மேற்கொண்டுள்ளோம். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். மேலும் திருட்டு நடைபெற்றுள்ள வீடுகளில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடர்களை விரைவில் பிடித்து விடுவோம்,’ என்றார்.

The post தமிழக-கர்நாடக மாநில எல்லையில் ஒரே வாரத்தில் 6 வீடுகளில் ₹1 கோடி நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Karnataka state border ,Tamil Nadu- ,Karnataka state border ,Anekal ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து