×

காட்டாற்று வெள்ளம் வந்தாலும் கவலையில்லை சதுரகிரியில் 7 இடத்தில் பிரமாண்ட பாலம்

*தடையின்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

திருவில்லிபுத்தூர் : சதுரகிரி மலையில் வெள்ளம் வந்தாலும் தங்குதடையின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில், சுமார் ரூ.4.95 கோடியில் பிரமாண்டமான பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள கோயிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். 18 சித்தர்களும் இங்கு வந்து சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

2015க்கு முன்பு வரை ஆண்டு முழுவதும் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இருந்தது. அதன்பிறகு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 8 பேர் இறந்தனர். இதனால் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில், சதுரகிரி மலையில் கனமழை பெய்தாலும், காட்டாற்று வெள்ளம் வந்தாலும், தடையின்றி சுவாமி தரிசனத்திற்கு செல்லும் வகையில் 7 இடங்களில் மிக உயரமான பாலங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சதுரகிரி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மழை பெய்யும்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் நீண்டதூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, சதுரகிரி மலைப்பகுதியில் 7 இடங்களில் உயரமான பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. 2015ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது தண்ணீர் எந்த அளவுக்கு சென்றதோ அதைவிட உயரமாக இந்த பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஓடை, கருப்புசாமி கோயில் அருகே உள்ள ஓடை, வெள்ளை பாறை ஓடை, கீழே நுழைவாயில் அருகே உள்ள ஓடை, மேலே கோயிலுக்கு முன்புறம் உள்ள ஓடை ஆகிய 7 ஓடைகளில் இந்த பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. வனத்துறையினரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் பாலம் கட்டும் வேலைகள் துவங்கும். சுமார் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் இந்த பாலங்கள் அமைக்கப்பட உள்ளன’’ என்றார்.

The post காட்டாற்று வெள்ளம் வந்தாலும் கவலையில்லை சதுரகிரியில் 7 இடத்தில் பிரமாண்ட பாலம் appeared first on Dinakaran.

Tags : Saduragiri ,Thiruvilliputtur ,Great Bridge ,
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...