×

துடியலூரில் எமதர்மன் வேடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்

 

பெ.நா.பாளையம், செப்.13: கோவை துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து காவல் துறை, அலார்ட் தொண்டு நிறுவனம் மற்றும் போர்ட் மோட்டார் ஐடி கம்பெனி ஆகியோர் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அதில் சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருந்தால் அவர்களுக்கு வாழ்த்துகள் அட்டை மற்றும் சாக்லெட்கள் வழங்கப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் மற்றும் முதலுதவி குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு அட்டையும் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் எமதர்மன் போல வேடமிட்டு கையில் பாசக்கயிறுடன் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் உயிர் இழக்க நேரிடும். என்னுடன் மேலே வந்துவிட வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் துடியலூர் போக்குவரத்து துறை எஸ்ஐ உதயபானு, அலார்ட் தொண்டு நிறுவன மேலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள், போர்ட் மோட்டார் ஐடி கம்பெனி ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். துடியலூர் பஸ் நிறுத்தத்தில் எமதர்மன் வேடத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

The post துடியலூரில் எமதர்மன் வேடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர் appeared first on Dinakaran.

Tags : Dudiyalur ,Emmatharman ,B.N.Palayam ,Traffic Police Department ,Alert Charity ,
× RELATED பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்...