×

திருவண்ணாமலை அருகே பல கோடி மதிப்பிலான நடிகை கவுதமியின் சொத்து அபகரிப்பு தொழிலதிபர், மனைவியிடம் விசாரணை: 3 மணி நேரம் குற்றப்பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பல கோடி மதிப்புள்ள விவசாய நிலத்தை மோசடியாக ஏமாற்றியதாக நடிகை கவுதமி கொடுத்த புகாரின் பேரில், ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அவரது மனைவியிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கவுதமி. குருசிஷ்யன் படத்தில் அறிமுகமாகி, பாபநாசம் படம் வரை ஏராளமான படங்களில் நடித்தவர். அவர், கடந்த 2004ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, அவரது சொத்துக்களுக்கு பவர் ஏஜென்டாக தொழிலதிபர் அழகப்பன் என்பவரை நியமித்திருந்தார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு மோசடி செய்து, ஏமாற்றிவிட்டதாக நடிகை கவுதமி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நடிகை கவுதமி அவரது வக்கீல்கள் மூலம் அழகப்பன் மீது மேலும் ஒரு புகாரை கொடுத்து உள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர் அழகப்பன். அவரது மனைவி நாச்சாள். இவர்கள், தற்போது சென்னை வேளச்சேரி பகுதியில் வசிக்கின்றனர். சினிமா பைனான்சியராக அழகப்பன் இருந்ததால், அவரது அறிமுகம் கிடைத்தது. மேலும், அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கடந்த 2004ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். எனவே, என்னுடைய மகளின் எதிர்காலத்துக்காக நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்து சொத்துக்கள் வாங்க சொன்னேன்.

நான் நேரில் செல்ல முடியாது என்பதால், எனது சொத்துக்களுக்கு அழகப்பனை அதிகாரப்பூர்வ பவர் ஏஜென்டாக நியமித்தேன். ஆனால், என் பெயரில் வாங்கிய சொத்துக்களை எனக்கே தெரியாமல் விற்பனை செய்து முறைகேடாக ஏமாற்றியிருக்கிறார். திருவண்ணாமலை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 4 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 2019ல் ரூ.48 லட்சத்துக்கு வாங்கினேன். தற்போது, அதன் சந்தை மதிப்பு பல கோடி என தெரிகிறது. ஆனால், அந்த நிலத்தை என்னுடைய பெயரிலும், அவரது மனைவி நாச்சாள் பெயரிலும் சேர்த்து பதிவு செய்திருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல், சொத்துக்களுக்கான ஆவணங்களையும் அளிக்காமல் ஏமாற்றுகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து ஐங்குணம் கிராமத்தில் நான் வாங்கிய 4 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.

அவருக்கு அளித்திருந்த பவரையும் சமீபத்தில் ரத்து செய்துவிட்டேன்.இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் நேற்று அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சாள் ஆகியோரிடம் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் விசாரணை நீடித்தது. அப்போது, ஐங்குணம் கிராமத்தில் கவுதமி பெயரில் வாங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், அவர் பவர் ஏஜென்டாக இருந்த காலத்தில் எந்தெந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது, அவை முறையாக நடிகை கவுதமியிடம் ஒப்படைக்கப்பட்டதா எனவும் விசாரித்தனர். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி கொடுத்த ரூ.25 கோடி சொத்துகள் அபகரிப்பு புகாரில் அழகப்பன் மற்றும் மனைவியிடம் போலீசார் இன்று விசாரிக்க உள்ளனர்.

The post திருவண்ணாமலை அருகே பல கோடி மதிப்பிலான நடிகை கவுதமியின் சொத்து அபகரிப்பு தொழிலதிபர், மனைவியிடம் விசாரணை: 3 மணி நேரம் குற்றப்பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.

Tags : Actress ,Gautami ,Thiruvandamalai ,Tiruvandamalai ,Kautami ,
× RELATED 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு...