×

தேசிய பார்வையற்றோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ.10.23 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ வாகனம்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனம் இயங்கி வருகிறது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்த மையத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில், கணிப்பொறி பயிற்சி, கால் சென்டரில் பணியாற்றுவதற்கான பயிற்சி, பிரெய்லி முறை சுருக்கெழுத்துப் பயிற்சி, தனி செயலாளர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்திற்கு ரூ.10.23 லட்சம் மதிப்பில் புதிய நான்கு சக்கர மருத்துவ வாகனத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் இலவசமாக நேற்று வழங்கியது. இதன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் அவசர மருத்துவ தேவைகளுக்கு இந்த மருத்துவ வாகனத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த மைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு பிராந்திய செயல் இயக்குனர் வி.சி.அசோகன், புதிய நான்கு சக்கர வாகனத்தை தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தின் மண்டல இயக்குனர் ஸ்ரீபிரியாவிடம் வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தின் இயக்குனர் மனிஷ் வர்மா காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் அசீம் பெய்க், சரவணன் மற்றும் தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்

The post தேசிய பார்வையற்றோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ.10.23 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ வாகனம் appeared first on Dinakaran.

Tags : National Institute for Development of Blind ,Poontamalli ,National Development Zone Institute for Blind and Handicapped ,Union Government's Health Department ,National Institute for Development of the Blind ,
× RELATED நிர்வாண நிலையில் கை, கால்கள்...