×

763 எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.29,251 கோடி: 53 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து

புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 763 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.29,251 கோடி எனவும் இவர்களில் 53 பேர் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 776 இடங்களில் 763 எம்பிக்கள் தற்போது பதவி வகிக்கின்றனர். இவர்களின் சுய சத்திய பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கமும், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஆய்வு செய்து புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 763 எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.29,251 கோடி. இதன்படி, தலா ஒரு எம்பியின் சராசரி சொத்து மதிப்பு ரூ.38.33 கோடி. 385 பாஜ எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7,051 கோடி, 16 டிஆர்எஸ் எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ.6,136 கோடி. ஒய்எஸ்ஆர் காங்கிரசின் 31 எம்பிக்கள் ரூ.4,766 கோடி சொத்துக்களையும், காங்கிரசின் 81 எம்பிக்கள் ரூ.3,169 கோடி சொத்துக்களையும், ஆம் ஆத்மியின் 11 எம்பிக்கள் ரூ.1,318 கோடி சொத்துக்களையும் வைத்துள்ளனர்.

ஒரு எம்பிக்கு அதிக சராசரி சொத்துள்ள மாநிலம் தெலங்கானா. 24 எம்பிக்களை கொண்ட இம்மாநிலத்தில் எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 262.26 கோடி. 36 எம்பிக்கள் கொண்ட ஆந்திராவில் சராசரி சொத்து ரூ.150.76 கோடி, 20 எம்பிக்கள் கொண்ட பஞ்சாப்பில் ரூ.88.94 கோடி. எம்பிக்களின் சராசரி சொத்துக்கள் குறைவாக உள்ள மாநிலம் லட்சத்தீவு, இங்குள்ள ஒரு எம்பியின் சொத்து மதிப்பு ரூ.9.38 லட்சம் மட்டுமே. 3 எம்பிக்கள் உள்ள திரிபுராவின் சராசரி சொத்து ரூ.1.09 கோடி மற்றும் மணிப்பூர் (3 எம்.பி.க்கள்) சராசரி சொத்து ரூ.1.12 கோடி.

பாஜ கட்சியில் ஒரு எம்பியின் சராசரி சொத்து மதிப்பு ரூ.18.31 கோடி, 81 காங்கிரஸ் எம்.பி.க்களின் சராசரி சொத்து ரூ.39.12 கோடி, 11 ஆம் ஆத்மி எம்பிக்களின் சராசரி சொத்து ரூ. 119.84 கோடி. மொத்தம் 763 எம்பிக்களில் 53 எம்பிக்கள் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். பாஜவில் 14 பேரும் (மொத்த எம்பிக்கள் 385), காங்கிரசில் 6 (81 எம்பிக்கள்), டிஆர்எஸ்சில் 7 (16), ஒய்எஸ்ஆர் காங்கிரசில் 7 (31), ஆம் ஆத்மியில் 3 (11), சிரோன்மணி அகாலி தளத்தில் 2 (2), திரிணாமுல் காங்கிரசில் ஒருவரும் (36) ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். இதுதவிர 40 சதவீத எம்பிக்கள் மீது கிரிமினல் வழக்குகளும், 25 சதவீதம் பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான கடுமையான குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 763 எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.29,251 கோடி: 53 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து appeared first on Dinakaran.

Tags : New Delhi ,MS ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...