* *இட்லி மாவுடன் சிறிதளவு கடலைமாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறு மொறுப்பாகவும், பொன்னிறமாகவும் இருக்கும்.
* மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுந்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறு மொறுப்பாக இருக்கும்.
* கீரைக்கடையல் செய்யும்போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.
* பருப்பு வேக வைக்கும்போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
* முட்டைத் தோல் எளிதாக உரிந்து வர முட்டை வேக வைக்கும்போது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
* மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் போட்டு அதன்மேல் உப்பை கொட்டி வைத்தால் உப்பில் நீர் சேராது.
* புளிக்குழம்பு செய்யும்பொழுது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
* பால் பாயசம் செய்யும்பொழுது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
* முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
* சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 2 கிராம்பு அதில் போட்டு வைத்தால் எறும்பு வராது.- கவிதா பாலாஜிகணேஷ்.
* கடுகை வாங்கியதும் லேசாக வறுத்து ஆறியவுடன் டப்பாவில் போட்டுவிட்டு, பிறகு தாளித்தால் கடுகு வெடித்துச் சிதறாது.
* துவரம் பருப்பை வேக வைக்கும்போது தேங்காய்த் துண்டு ஒன்றை நறுக்கிப் போடுங்கள். பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.
* ஆப்பத்திற்கு அரைக்கும்போது பச்சரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் ஆப்பம் மொர மொரப்பாக இருக்கும்.
* பாலுடன் இரண்டொரு நெல்மணி களைப் போட்டு வைத்தால் காலையில் கறந்தபால் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால், துடைத்துவிட்டு, எண்ணெய் கொட்டிய இடத்தில் கோதுமை தவிட்டினைத் தூவி பெருக்கினால் எண்ணெய் பிசுக்கு இருக்காது.
* அப்பளம் வைத்திருக்கும் டப்பாவில், சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் அப்பளம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* பாகற்காய் குழம்பில் ஒரு கேரட்டையும் சேர்த்துப் போட்டால் குழம்பில் கசப்பே தெரியாது.
* அவலை அடுப்பில் வைத்து லேசாக வறுத்து பாட்டில்களில் அடைத்து வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* காபி டிகாஷன் மீதமாகிவிட்டால், அதில் கொஞ்சம் சர்க்கரையைப் போட்டு வைத்தால் மறுநாள் டிகாஷன் புதிது போலவே இருக்கும்.- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
* தக்காளி சாதம் கிளறும்போது பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை அரைத்துவிட்டுச் செய்தால் சுவையாக இருக்கும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு விட்டால் தக்காளி சாதம், பிரியாணி போல் வாசனையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு பொரியலில் மொறுமொறுப்புக்காக பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து செய்தால் சுவை கூடும்.
* வெங்காயச் சாம்பார் செய்கையில் சிறிதளவு சின்ன வெங்காயத்தை வதக்கி சாம்பாருக்கு அரைக்கும் பொருட்களுடன் சேர்த்தரைத்து சாம்பாரில் போட்டால் சாம்பார் வாசனை அனைவரையும் சாப்பிட தூண்டும்.
* பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரைத் தேங்காய் வறுத்துச் சேர்த்து பருப்புப் பொடி அரைக்கலாம். பொடி மிகவும் வாசனையாக இருக்கும். இட்லிக்குத் தொட்டுக் கொண்டாலும் ருசிக்கும். சாதத்துடன் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டாலும் சுவை அபாரமாய் இருக்கும்.
* சப்பாத்தி மாவில் மல்லித்தழை, புதினா போன்றவற்றை பொடிப் பொடியாக நறுக்கி போட்டுப் பிசைந்து சப்பாத்தி செய்தால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
* பச்சைமிளகாய், இஞ்சி, கேரட் மூன்றையும் மெலிதாக நறுக்கி உப்பு சேர்த்து, அதில் எலுமிச்சை பழத்தைப் பிழியவும். ருசியான திடீர் ஊறுகாய் ரெடி.- இந்திராணி தங்கவேல்
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.
