×

பெங்களூரு மாணவன் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

*திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பு

திருப்பத்தூர் : பெங்களூரு மாணவன் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி(40). இவரது வீட்டிற்கு கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெங்களூருவில் வசிக்கும் அவரது தங்கை கலையரசியின் மகன் அபினவ்(17) என்ற 10ம் வகுப்பு மாணவன் வந்தான். இதையடுத்து அபினவ் மற்றும் கலைச்செல்வியின் மகன் முகேஷ்(20) இருவரும் பைக்கில் சென்று பால்நாங்குப்பத்தில் உள்ள கூட்டுறவு பால் சொசைட்டிக்கு பால் ஊற்றி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த தயாளு(28), குமார்(30), ராகுல்(20) ஆகிய 3 வாலிபர்களும் எதற்காக பைக்கில் வேகமாக செல்கிறீர்கள் என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது தயாளு, குமார், ராகுல் ஆகிய 3 பேரும் சேர்ந்து அபினவ் மற்றும் முகேஷ்சை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை பார்த்த கலைச்செல்வி அவர்களை தடுத்துள்ளார். ஆனாலும் 3 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டியதில் அபினவ் சம்பவ இடத்திலேயே பலியானார். முகேஷ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தயாளு, குமார், ராகுல் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது‌. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் தரப்பில் பி.டி .சரவணன் ஆஜரானார்.
அப்போது மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி சாட்சியங்கள் அடிப்படையில் குற்றவாளிகள் 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ₹10 ஆயிரம் கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் ஜோலார்பேட்டை போலீசார் 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பெங்களூரு மாணவன் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Tirupathur ,Thirupathur ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்