×

எழும்பூரில் ரவுடி சத்யாவை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் அண்ணன் ‘நாய் ரமேஷ்’க்காக மனைவி உட்பட 2 பேரை கொன்று பழிதீர்த்த சகோதரன் ரூபன்

* துணை கமிஷனர் தலைமையில் 2 தனிப்படை
* கொலையாளி உள்பட 4 பேர் கைது l பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: எழும்பூரில் ரவுடி சத்யா ஓட ஓட வெட்டி கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக, புளியந்தோப்பு ரவுடி ‘நாய் ரமேஷ்’ கொலைக்காக அவரது சகோதரன் ரூபன், 3 ஆண்டுகள் காத்திருந்து, நாய் ரமேஷ் கொலையான அதே தினத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அடுத்த புழல் காவாங்கரை 15வது தெருவை சேர்ந்த ரவுடி சத்யா(24). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர், நேற்று முன்தினம் இரவு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள ஜூஸ் கடை முன்பு நண்பரை பார்க்க காத்திருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென ரவுடி சத்யாவை சுற்றி வளைத்து சட்டையின் பின்புறம் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அப்போது அங்கிருந்த கடைகளில் டீ, ஜூஸ், டிபன் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினர்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவுடி சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய எடுத்து சென்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த 2020ம் ஆண்டு புளியந்தோப்பை சேர்ந்த ரவுடி ‘நாய் ரமேஷ்’ கொலை செய்யப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில் ‘நாய் ரமேஷ்’ சகோதரன் ரவுடி ரூபன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி சத்யாவை கொலை செய்தனர் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்களின் அதிரடி நடவடிக்கையில் சென்னை புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ரூபன், டேவிட் பிரசாத், அருண் குமார், சரவணன் (எ) வெள்ளை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 அரிவாள், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கிய குற்றவாளி ரூபனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: 2016ம் ஆண்டு ரவுடியும் கஞ்சா வியாபாரியான சிவராஜை, ரவுடி நாய் ரமேஷ் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். இதற்கு பழிவாங்க நாய் ரமேஷை கொலை செய்ய, கடந்த 4 ஆண்டுகளாக ரவுடி சத்யா தனது நண்பர்கள் 8 பேருடன் காத்திருந்தார். எனினும் நாய் ரமேசை கொல்ல முடியவில்லை. இந்நிலையில், நாய் ரமேஷ் சகோதரன் ரூபன் என்பவர், புளியந்தோப்பு கஞ்சா வியாபாரி புஷ்பாவின் மகள் சுப்ரியா(32) என்பவரை திருமணம் செய்துள்ளார். சுப்ரியாவும் தனது தாயுடன் சேர்ந்து கஞ்சா விற்றுவந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனகசப்பில் 2 குழந்தைகளுடன் சுப்ரியா, கணவர் ரூபனை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். தன் கணவர் ரூபனுடன் வாழ முடியாமல் போனதற்கு நாய் ரமேஷ் தான் காரணம் என்று சுப்ரியா கூறியுள்ளார்.

இதனால், சுப்ரியாவை அணுகிய ரவுடி சத்யா தரப்பினர் உன் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் நாய் ரமேஷை போட்டு தள்ளுகிறோம் என்று கூறினர். இதையடுத்து, நாய் ரமேஷை பழிவாங்கும் வகையில் சுப்ரியா, ‘நாய் ரமேஷ்’ குறித்து தகவல்களை ரவுடி சத்யா தரப்பிற்கு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி இரவு பிரபல ரவுடி ரமேஷ் பாபு (எ) நாய் ரமேசை, பேசின் பிரிட்ஜ் குருசாமி நகரில் ரவுடி சத்யா தன் நண்பர்களுடன் சேர்ந்து படுகொலை செய்தார். இந்த கொலை வழக்கில் புழல் காவல் நிலையத்தில் ரவுடி சத்யா மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் சரணடைந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து ரவுடி சத்யா அடி தடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், தனது அண்ணன் நாய் ரமேஷ் கொலைக்கு உதவியது தன் மனைவி சுப்ரியா தான் என்பது கணவன் ரூபனுக்கு தெரியவந்தது. இதனால், ரூபன் தன்னுடன் 5 பேரை அழைத்து சென்று 2021ம் ஆண்டு ஏப்ரல் 2வது வாரத்தில் மனைவி சுப்ரியாவை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இந்த வழக்கில் பேசின்பிரிட்ஜ் போலீசார் ரூபன் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், ரவுடி தீபன் உள்ளிட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். தன் அண்ணனை கொலை செய்த அதே நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரவுடி சத்யாவை கொலை முடிவு செய்தனர்.

இந்நிலையில், ரூபன், நாய் ரமேஷ் கொலையான 3ம் ஆண்டு நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினமே ரவுடி சத்யாவை கொலை செய்து பழி தீர்க்க ரூபன் முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்கள் 5 பேருடன் நேற்று முன்தினம் மதியம் முதல் ரவுடி சத்யாவை பின் தொடர்ந்து கடைசியாக எழும்பூரில் வைத்து தனது அண்ணன் கொலை செய்யப்பட்ட தினம் மற்றும் அதே நேரத்தில் வெட்டி பழித்தீர்த்துள்ளான். ரூபன் தனது அண்ணன் நாய் ரமேஷ் கொலைக்காக தனது மனைவி சுப்ரியா மற்றும் ரவுடி சத்யா என 2 கொலை செய்துள்ளான். ரவுடி ரூபன் மீது 3 கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post எழும்பூரில் ரவுடி சத்யாவை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் அண்ணன் ‘நாய் ரமேஷ்’க்காக மனைவி உட்பட 2 பேரை கொன்று பழிதீர்த்த சகோதரன் ரூபன் appeared first on Dinakaran.

Tags : Ruben ,Rudi Satya ,Elampur ,Deputy Commission ,Ramesh ,
× RELATED பொய் வழக்கு போடுவேன் என போலீசார்...