×

அஇஅதிமுக என்ற கட்சியின் பெயரை அனைத்து பாரத் அதிமுக என மாற்ற முடியுமா?: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

ஆலந்தூர்: நாட்டின் பெயரை மாற்றுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் அஇஅதிமுக என்ற தங்கள் கட்சியின் பெயரை அனைத்து பாரத் அதிமுக என மாற்ற முடியுமா? என எடப்பாடி பழனிசாமிக்கு திமுகஅமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆலந்தூர் தெற்கு பகுதி 167வது வட்ட திமுக சார்பாக கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரசார கூட்டம் நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் காலனியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார்.

ஆலந்தூர் மண்டலக்குழு தலைவரும் தெற்கு பகுதி திமுக செயலாளருமான என்.சந்திரன், வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், வார்டு பெண் கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் வரவேற்றார். கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சபாபதி மோகன், திமுகஅமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதில் ஆர்எஸ் பாரதி பேசுகையில், ‘‘இந்தியா என்ற பெயர் காலங்காலமாக இருக்கிறது. திமுக கூட்டணியின் பெயர் இந்தியா என்றதும் மோடி நாட்டின் பெயரை பாரத் என மாற்றுகிறார். பாரத் என்று பெயரை மாற்றினால் என்ன தவறு என எடப்பாடி கேள்வி கேட்கிறார். அஇஅதிமுக என்ற பெயரை அனைத்து பாரத் அதிமுக என அவரால் மாற்ற முடியுமா? சனாதனம், சுயமரியாதை என்ன என்பதை இளைஞர்களுக்கு விளக்க வேண்டும். திமுகவினர் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர்தான் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. உங்களை விட அசல் இந்துக்கள் நாங்கள்தான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி எனச் சொன்ன சாமியார் வீட்டிற்கு வருமான வரி, அமலாக்கத் துறை சோதனை நடத்த வேண்டும்,’’ என்றார்.

இந்த விழாவில் 1,000 பெண்களுக்கு தோசை கடாய்களை அமைச்சர் தா.மோ.அன்பாசன் வழங்கினார். இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம், வழக்கறிஞர் பாஸ்கரன், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், சுற்றுச்சூழல் பிரிவைச் சேர்ந்த சாய் ஜெயகாந்த், ஆனந்தன், விளையாட்டுத் துறை துணை அமைப்பாளர் சுகுணா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாலமோன், தேவியேசுதாஸ், அமுத பிரியா, ஆதம் லட்சுமிபதி, முரளிகிருஷ்ணன், வேலவன், யேசுதாஸ், பாபு, ரமணா, பிரான்சிஸ் கேபிள்ராஜா, காந்த், விஜய்பாபு, சதீஷ், ஜாக்குலின் பாண்டிச்செல்வி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post அஇஅதிமுக என்ற கட்சியின் பெயரை அனைத்து பாரத் அதிமுக என மாற்ற முடியுமா?: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,All Bharat AIADMK ,RSBharti ,Edappadi ,Alandur ,Bharat ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...