×

நிலவில் சில டன் கனிமங்கள் எடுத்தால் பெரிய நாடுகளுக்கு எரிசக்தி தர முடியும்: இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பேட்டி

கோவை: ‘நிலவில் இருந்து கனிமங்களை சில டன்கள் எடுத்து வந்தாலே போதும், அதை வைத்து பெரிய நாடுகளுக்கு எரிசக்தி தர வாய்ப்பு ஏற்படும்’ என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கணினி மட்டுமே முக்கியம் இல்லை. மற்ற பொறியியல் துறைகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அடுத்து விண்வெளி புரட்சி வருகின்றது.

செல்போன் டவர் இல்லாத வகையில், செயற்கை கோள்களால் இயங்கும் அடுத்த தலைமுறை கைபேசி வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குலசேகரபட்டினத்தில் அமையும் ஏவுதளம் உலகின் மிகச்சிறந்த மையமாக அமையும். வர்த்தக ரீதியில் தினம் தினம் ஏவுகணைகள் அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். நிலவை நோக்கிய பயணங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. வெப்பமயமாக்கலை தடுக்க முடியும். நிலவில் இருந்து கனிமங்களை சில டன்கள் எடுத்து வந்தாலே அதை வைத்து பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அதற்காக சில கட்டமைப்புகளை நிலவிலும் உருவாக்க முடியும். அதற்கு நிறைய தொழில்நுட்பம், ஆட்கள் தேவை. அதற்கு பொறியியல் படித்தவர்கள் அதிகம் தேவைப்படுவார்கள். அதனால் மாணவர்கள் பொறியில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு ஸ்டெம் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு பள்ளியில் ஸ்டெம் மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலவில் நீர் இருப்பதையும், துருவப்பகுதியில் சந்திரயான் இறங்கி இருப்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

விண்வெளிக்கு போய் வரும் தொழில்நுட்பத்தை வைத்து விமான பயணத்தையும் மாற்ற முடியும். ராக்கெட் தொழில் நுட்பத்தில் சீக்கிரமாக, பத்திரமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வரவும் வாய்ப்பு இருக்கிறது. நிலவுக்கு செல்ல பிற நாடுகளுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து செல்ல வேண்டும். நிலவிலேயே விண்வெளி மையம் அமைக்க வேண்டும். அதுவும் சந்திரயான்-3 இறங்கிய இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இருக்கின்றோம். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

The post நிலவில் சில டன் கனிமங்கள் எடுத்தால் பெரிய நாடுகளுக்கு எரிசக்தி தர முடியும்: இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : moon ,ISRO ,Govai ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...