×

தந்திரம் தேவை

தலைநகர் டெல்லியில் இரண்டு நாள் ஜி 20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. அடுத்த ஆண்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா கலந்து கொள்ளவில்லை. சமீபகாலமாக, அமெரிக்கா- இந்தியா நல்ல நட்புறவில் இருந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சீனாவுக்கு இந்தியா மூலம் நெருக்கடி கொடுக்க முடியும் என அமெரிக்கா எண்ணுகிறது. தொடர்ந்து, அமெரிக்கா- இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாதது எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால், ரஷ்யா பங்கேற்று இருக்கலாம். போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்வதால் ரஷ்யா பங்கேற்பதை புறக்கணித்துள்ளது. இந்தியா- ரஷ்யா நட்பை உடைக்கவும், பலவீனப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டது. ஆனாலும், இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்காவை நம்புவதை விட ரஷ்யாவை நம்பி களத்தில் இறங்கலாம் என்பதை ஒன்றிய அரசு அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகிறது. வெளிப்படையாக உதவி வேண்டும் என ரஷ்யா கேட்கவில்லை. சீனா மறைமுகமாக ரஷ்யாவுக்கு உதவிகளை செய்யலாம். இந்தியா மறைமுகமாக கூட உதவி செய்ய முடியாத சூழல் உள்ளது. இது ரஷ்யாவுக்கு நன்றாக தெரியும். போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் நினைத்தால் கூட முடியாது. அமெரிக்கா நினைத்தால் தான் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி 20 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது.

ஆனால், பேச்சுவார்த்தையை துவக்க போர்க்களத்தில் உள்ள இரு நாடுகளும் முன்வர வேண்டும். அதற்கு பொதுவான ஒரு நாடு அழைப்பு விடுக்க வேண்டியது மிக அவசியம். உக்ரைன்- ரஷ்யா போரை பேச்சுவார்த்தையின் மூலம் கூட எளிதாக முடிவுக்கு கொண்டு வர முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஏதாவது ஒரு நாடு விட்டு கொடுத்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். உக்ரைன்- ரஷ்யா போர் விஷயத்தில் ஒன்றிய அரசு கவனமாக செயல்பட வேண்டும். உலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதிலும் சிறந்த நாடாக இந்தியா விளங்க வேண்டும்.

அதற்கான சூழலை அமைத்து தர வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் பிற நாட்டை சார்ந்து இருக்க கூடாது. அப்போது தான் உலக அரங்கில் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். இனி வரும் காலங்களில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நம்பி இருக்க வேண்டாம். உலகை வழிநடத்தும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது. எனவே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்க வேண்டும். மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது. மாற்ற முடியாதது எதுவும் இல்லை. ராஜதந்திரங்களை கையாண்டு நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றும் முயற்சியிலும் ஒன்றிய அரசு இறங்க வேண்டும்.

The post தந்திரம் தேவை appeared first on Dinakaran.

Tags : G20 Summit ,Delhi ,Brazil.… ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...