×

ரூ.4,800 கோடி முறைகேடு குற்றச்சாட்டு எடப்பாடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்: தமிழ்நாடு அரசு தாக்கல்

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த 2018ம் ஆண்டு திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், ‘‘ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி முறைகேட்டில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார். அதனால் இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது எடப்பாடி பழனிசாமியின் வசம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இருந்ததால் ஆர்.எஸ்.பாரதி தொடர்பான புகாரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘‘எடப்பாடி மீதான ரூ.4800 கோடி முறைகேடு புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘‘ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படியும் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதியதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கடந்த ஜூலை 18ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் அனைத்து விதமான ஆவணங்களையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக இந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையர் முன்னதாக ஏற்கவில்லை. இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்து தடை விக்க வேண்டும்.

மேலும் எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுசார்ந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் அடுத்த ஒருசில நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் அதிகாரிகள் சிலரும் சிக்குவார்கள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் முறைகேடு மூலம் ரூ.4,800 கோடி ஊழல் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2018ல் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
* இந்த புகாரில் முதலில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பின்னர் அதை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலையில் உத்தரவிட்டது.
* இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post ரூ.4,800 கோடி முறைகேடு குற்றச்சாட்டு எடப்பாடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்: தமிழ்நாடு அரசு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Edapadi ,Tamil Nadu Government ,New Delhi ,Tamil Nadu Govt ,Chief Minister ,Edabadi Palanisami ,Edapati ,Dinakaran ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...