×

நூறு நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

செய்யூர்: சித்தாமூர் அருகே நூறு நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில், மேட்டு கொளத்தூர், பள்ள கொளத்தூர், புத்தமங்கலம், ஆயக்குணம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், பள்ள கொளத்தூர் கிராம மக்களுக்கு மட்டும் 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை, ஆண்டுக்கு 5 வாரங்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை அவர்கள் 30 நாட்கள் மட்டுமே வேலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், வேலை சரிவர தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் செல்வி செல்லப்பன் மற்றும் ஊராட்சி செயலாளர் முருகேசன் ஆகியோரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் முறையிட்டிருந்தனர். அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சித்தாமூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், முற்றுகையிட்டவர்களை சமரசம் செய்ததோடு 100 நாள் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post நூறு நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,Seyyur ,panchayat ,Chittamur ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு