×

நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் புழுதி பறக்கும் வண்டலூர் – கேளம்பாக்கம் தார் சாலை: விபத்து அதிகரிக்கும் அபாயம்

கூடுவாஞ்சேரி: நல்லம்பாக்கம் கூட்டு சாலையில், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் புழுதி பறக்கும் அவலநிலை காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி, பழைய மாமல்லபுரம் சாலையில் இணையும் மாநில ஊரக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் உள்ள நல்லம்பாக்கம் கூட்டு சாலை பகுதியில் அடர்த்தியாக தேங்கி இருக்கும் மண் குவியலால் வெயில் காலங்களில் புழுதி பறக்கிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவகிறது. ஏற்கனவே பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். மேலும், விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை புகார் கூறியும், நெடுஞ்சாலை துறையினர் மெத்தனப்போக்கில் தூங்கி வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் சர்மாறையாக குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நல்லம்பாக்கம் கூட்டு சாலை பகுதியை ஒட்டியபடி சட்ட விரோதமாக ஏராளமான கிருஷர்கள் இயங்கி வருகின்றன. இங்கு உத்திரமேரூர், வாலாஜாபாத், தென்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கனரக வாகனங்களில் சக்கை கற்கள் ஏற்றி வரப்பட்டு அதை கிரஷர்களில் உள்ள இயந்திரங்களில் கொட்டி அரைக்கின்றனர். பின்னர், அதை ஜல்லி கற்கள், சிப்ஸ், எம்சாண்ட் மற்றும் பவுடராக மாற்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கனரக வாகனங்களில் எடுத்து செல்லப்படுகின்றன.

இதில், மேற்படி கிரஷர்களில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் நல்லம்பாக்கம் கூட்டு சாலையில் எதிரும், புதிருமாக திரும்பும்போது மரண பள்ளங்கள் மற்றும் மண் குவியல்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதில், சாலையின் 2 பகுதிகளிலும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் புழுதி பறப்பது மட்டுமில்லாமல் அப்பகுதி முழுவதும் 300 மீட்டர் தூரம் வரை புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதில் பைக், ஆட்டோ, கார், வேன், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறில் சிக்கி தவியாய் தவிக்கின்றனர். இதில், இரவு நேரங்களில் மரண பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வேகமாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.

ஏற்கனவே, பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில், விபத்து ஏற்படும்போது சாலையின் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அவசர ஆபத்துக்கு கூட 108 ஆம்புலன்ஸ் செல்ல முடிவதில்லை. மேலும், பள்ளி மாணவர்கள் அன்றாட வேலைக்கு சென்று வருவோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் குறித்து நேரத்திற்கு சென்று வர முடியாமல் பரிதவிக்கின்றனர். மேலும், நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் நாளுக்கு நாள் பெருகிவரும் மண் குவியலால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

*அதிகாரிகள் பயணம் செய்தும் பயனில்லை
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள நல்லம்பாக்கம் கூட்டு சாலை பகுதி வழியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உட்பட நெடுஞ்சாலை துறை, காவல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதை அறிந்தும், மண் குவியல்களால் புழுதி பறப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமே சட்ட விரோதமாக இயங்கி வரும் கிரஷர்களால்தான் நல்லம்பாக்கம் கூட்டு சாலையில் மரண பள்ளங்களும், மண் குவியல்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால், அடிக்கடி நடக்கும் விபத்துகளால் பலர் உயிரிழக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில், சட்ட விரோதமாக இயங்கி வரும் கிரசர்களை தடை செய்ய சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் புழுதி பறக்கும் வண்டலூர் – கேளம்பாக்கம் தார் சாலை: விபத்து அதிகரிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Nallambakkam Goodrot ,Kelambakkam Tar Road ,Vandalur-Kelambakam Road ,Nalamanakam Joint Road ,Cannambakkam Tar Road ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...