×

கூடுவாஞ்சேரியில் காணாமல் போன 2 மாணவர்கள் மதுரையில் மீட்பு: விசாரணையில் ‘திடுக்’ தகவல்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் சைக்கிளில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன் மதுரையில் 2 மாணவர்களையும் மீட்டு, நேற்று முன்தினம் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களிடம் போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. சென்னை கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே விஸ்வநாதபுரம் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (45). மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கு மனைவி மற்றும் தர்ஷன் (17), விஷால் ராகவ் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரபாகரனின் மனைவி பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், தனது 2 மகன்களையும் பிரபாகரன் வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 7ம் தேதி பிரபாகரனின் 2வது மகன் விஷால் ராகவ் சைக்கிளில் ஊரப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பள்ளி நண்பரை பார்க்க கிளம்பி சென்றுள்ளார். இதேபோல், ஊரப்பாக்கம் ஊராட்சி, மதுரை மீனாட்சிபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் சையது அமீன் (45). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலைபார்த்து வருகிறார்.

இவரது மகன் சையத் காசிப் (15). தன்னை பார்க்க சைக்கிளில் வந்த பள்ளி நண்பர் விஷால் ராகவ்வுடன் சையத் காசிப்பும் கிளம்பினார். பின்னர், 2 பேரும் திடீரென காணாமல் போய்விட்டனர். இப்புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளுடன் காணாமல் போன 2 பள்ளி மாணவர்களை மீட்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும், காணாமல்போன மாணவர்களின் புகைப்படங்களுடன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு மதுரையில் விஷால் ராகவ், சையத் காசிப் ஆகியோரை மதுரை போலீசார் மீட்டு, அவர்களது உறவினர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மாணவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், நாங்கள் படிப்பில் மந்தம் என்பதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டிக்கொண்டே இருந்தனர். இதனால், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி எங்காவது வேலை செய்து பிழைக்கலாம் என கருதினோம். இதைத் தொடர்ந்து காசிப் வீட்டிலிருந்து 3 சவரன் நகை மற்றும் ரூ.500 பணத்துடன் நாங்கள் இருவரும் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் சைக்கிள்களை விட்டுவிட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு சென்றோம். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் மதுரைக்கு சென்றுவிட்டோம்.

ரயிலில் பழக்கமான நபர் ஒருவர், எங்களுக்கு வேலை வாங்கி தருவதாக பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றார். அங்கு எங்களிடம் இருந்த நகைகளை மர்ம நபர் வாங்கி அடகு வைத்து கிடைத்த ரூ.5 ஆயிரம் பணத்துடன் மீண்டும் மதுரைக்கு வந்தோம். மதுரை ரயில்நிலைய நடைபாதையில் நாங்கள் தூங்கியபோது, எங்களிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிக்கொண்டு மர்ம நபர் தப்பியோடிவிட்டார். நாங்கள் ரயில்நிலையத்தில் தவிப்பதை பார்த்து ரயில்வே போலீசார் மீட்டு, எங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, உறவினர்கள் துணையுடன் எங்களை ரயில்வே போலீசார் சென்னைக்கு அனுப்பி வைத்தனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. மாணவர்களை நேற்று முன்தினம் அவர்களின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

The post கூடுவாஞ்சேரியில் காணாமல் போன 2 மாணவர்கள் மதுரையில் மீட்பு: விசாரணையில் ‘திடுக்’ தகவல் appeared first on Dinakaran.

Tags : Kherwanjeri ,Madura ,Krivanjeri ,Kriwanjeri ,Dinakaraan ,
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது