×

சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்; சாலை மறியல்: டயர்கள் எரிப்பு

திருமலை: ஊழல் வழக்கில் கைதான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. ெதாடர்ந்து, அக்கட்சியினர் சாலை மறியல் மற்றும் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தில் ₹371 கோடி ஊழல் நடந்ததாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சந்திரபாபுவை கடந்த 9ம் தேதி சிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு விசாரணை கைதி எண் 7691 ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள ‘சினேகா’ பிளாக் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், சிஐடி தரப்பில் சந்திரபாபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், சந்திரபாபுவிற்கு ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த நேற்று தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்தது. இதையடுத்து, திருப்பதி பஸ் நிலையம் அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சித்தூர், குப்பம், இந்துப்பூர் சாலையில் அக்கட்சியினர் டயர்களை கொளுத்தி போராட்டம் செய்தனர்.

மேலும், அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினர். பஸ் டயர்களில் இருந்து காற்றை இறக்கினர். கடைகள் அடைக்கும்படி கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களை தவிர மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை எந்தவித பாதிப்பும் இல்லை. தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தானாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், அச்சம் காரணமாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளும் நேற்று செயல்படவில்லை.

The post சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்; சாலை மறியல்: டயர்கள் எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrapabu Naidu ,Andhra ,Tirumalai ,AP ,Chief Minister ,Chandrababu Naidu Naidu ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...