×

தேனிகாரரின் செல்போன் எண்ணை பார்த்து கட்சி நிர்வாகிகள் எதற்காக ஓட்டம் பிடித்தார்கள் என்பதை சொல்கிறார் wiki யானந்தா

‘‘தே னிகாரரின் செல்போன் எண்ணை பார்த்து எதற்காக கட்சியினர் அதிர்ச்சி அடைந்தாங்களாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாடு முழுவதும் இலைக்கட்சி மூன்றாக பிரிந்து கிடந்தாலும், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சேலம்காரரின் அணியின் கைதான் ஓங்கி நிற்கிறது. இந்த அணிக்கு ஏதாவது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவேண்டும் என ேதனிகாரர் தரப்பினர், கடந்த பல மாதங்களாக, பல்வேறு முயற்சி எடுத்து வர்றாங்க. இந்நிலையில், சேலம்காரர் மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தியதுபோல், கோவையில் நாமும் மாநாடு நடத்தி பலத்தை நிரூபிக்க வேண்டும் என திட்டமிட்ட தேனிகாரர் அதற்காக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரி யாரும் முன்வரவில்லை. யார் யாரை தொடர்புகொண்டு பேசினாரோ, அவர்கள் எல்லோருமே ‘துண்டை காணோம்.. துணியை காணோம்…’ என தலைதெறிக்க தப்பி ஓடிட்டாங்களாம். ஒரே ஒரு மாஜி எம்எல்ஏ அவரது கைக்குள் இருந்தார். அவரும் கடந்த பல மாதங்களுக்கு முன்பே அவரை விட்டு விலகிச்சென்று விட்டார். அதனால், கோவையில் அணியை முன்னெடுத்துச்செல்ல யாருமே இல்லையாம். ஒரு மாநாட்டுக்கே கூடாதவங்க… தேர்தல் சமயத்தில் வேறு அணிக்கு ஜம்ப் ஆகும் நிலை இருப்பதாக சொல்றாங்க. இருந்தாலும் மனம் தளராத தேனிகாரர், முன்னாள் ஆவின் தலைவர் ஒருவரை ஓபிஎஸ் தொடர்புகொண்டு பேசினாராம். அதற்கு அவர், ‘சிங்கிள் கூட்டம் நடத்தக்கூட ஆளில்லை… இதுல, எங்கண்ணே மாநாடு நடத்துறது என்று பேசி கோவை மாநாட்டுக்கு ஓபனாக ‘ஆப்’ வைத்துவிட்டாராம்…’’ என்றார் விக்கியனாந்தா.

‘‘புல்லட்சாமியிடம் கொந்தளித்த எம்எல்ஏக்களை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததை தன்னுடைய தனிப்பட்ட சாதனையாக பவர்புல் பெண்மணி பேசி வருகிறாராம். இட ஒதுக்கீடுக்கான கோப்பு தயாரித்து புல்லட்சாமி அனுப்பியபோதும் உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் அளிக்காமல், சென்னை ஊடகங்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி, நான்தான் நடவடிக்கை எடுத்தேன் என்பது போல தகவலை கசியவிட்டாராம். அடுத்த கட்டமாக ஒன்றிய அனுமதி கிடைத்தவுடனே, அதனையும் பகிரங்கமாக அவரே அறிவித்தாராம். செல்லும் இடமெல்லாம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நான் இட ஒதுக்கீடு வாங்கிக்கொடுத்தேன் என்பது போல ஓவர் பில்டப் செய்கிறாராம். இதையெல்லாம் கண்டு கடுப்பான ஜக்கு எம்எல்ஏக்கள், நேராக புல்லட்சாமியிடம் சென்று நியாயம் கேட்டார்களாம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனை என்று கூட சொன்னால் பரவாயில்லை. இது என்னவோ, பவர்புல் பெண்மணி இசையின் தனிப்பட்ட சாதனை என்பது போல உருவாக்கிவிட்டதை சொல்லி புலம்பினார்களாம். அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த புல்லட்சாமி, வேறு ஒன்னும் இல்லப்பா, அவருக்கு எம்பி தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட ஆசை வந்துள்ளதாக தெரியுது… அதற்காக இப்போதே பிரசாரத்தை ஆரம்பிக்கிறார் எனக்கூறி சிரித்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாநாட்டால் பதவி பறிபோகும் உச்சகட்ட விரக்தியில் புலம்பும் மாஜி அமைச்சர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரர் அணியில் கடலோர மாவட்டத்தில் மாஜி அமைச்சரான மணியானவர் இருந்து வருகிறார். சமீபத்தில் தூங்காநகரில் சேலம்காரர் பெரிய அளவில் மாநாடு நடத்தி காட்டினார். சேலம்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சர்கள் தனது செல்வாக்குகளை காட்டுவதற்காக போட்டி போட்டு அவர்களது சொந்த மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை தூங்காநகரத்துக்கு அழைத்து வந்து கூட்டத்தை காட்டினர். கடலோர மாவட்டத்தில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு மணியானவர் கூட்டத்தை அழைத்து செல்ல வில்லை என பின்னர் தான் தெரிய வந்தது. இதனால் மணியானவர் மீது சேலம்காரர் உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறார். மணியானவரின் நடவடிக்கைகள் குறித்து ரகசியமாக கண்காணிக்க சேலம்காரர் அவரது டீமுக்கு உத்தரவு போட்டுள்ளார். இதனையடுத்து சேலம்காரர் டீம், மணியானவர் நடவடிக்கைகள் குறித்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் அவரது மாவட்ட செயலாளர் பதவி விரைவில் பறிக்க கூடும் என கடலோர மாவட்டம் முழுவதும் பேச்சு ஓடுகிறதாம்… இந்த தகவல் தெரிய வந்த மணியானவர், சேலம்காரர் மீது கடும் அதிருப்தியில் கட்சியில் உள்ளவர்களிடம் பேசாமல் ஒதுங்கியே இருந்து வந்தார்.
இந்நிலையில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த மணியானவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கல்வி கடனை கட்டமுடியாமல் பெற்றோர்கள் கஷ்டம் அடைகின்றனர். இதனால் கல்வி கடனை ரத்து செய்ய ஒன்றிய அரசு முன்வரவேண்டும். ஒன்றிய அரசை, மாநிலத்தில் ஆளும் அரசு வலியுறுத்த வேண்டும் என்றார். இந்த தகவல் தெரிய வந்த நிர்வாகிகள், மாநாட்டுக்கு பின்னர் மணியானவர் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசுகிறார். ஒன்றிய அரசுடன் கூட்டணியில் இருப்பது இலைகட்சியினர். அப்படி இருக்கும் போது நாமே ஒன்றிய அரசை வற்புறுத்தி கல்விகடனை ரத்து செய்ய எப்படி சொல்ல
முடியும். அதை விட்டு மாநிலத்தில் ஆளும் அரசை கல்வி கடனை ரத்து செய்ய சொல்வது எப்படி சரியாக இருக்கும். மணியானவர் பதவியை சேலம்காரர் பறிக்க போவாதாக கூறியதில் இருந்து மணியானவர் உச்சகட்ட விரக்தியில் புலம்புகிறார்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனிகாரரின் செல்போன் எண்ணை பார்த்து கட்சி நிர்வாகிகள் எதற்காக ஓட்டம் பிடித்தார்கள் என்பதை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thenikar ,De Nigar ,Peter ,Tamil Nadu ,Thenikaran ,wiki ,Dinakaran ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது