×

அதிகாலையில் அசத்தல் சுவை! 4 மணிக்கு நான்வெஜ் டிபன்

சென்னையில் மிட்நைட் பிரியாணி சாப்பிடுவதற்கு தனிக்கூட்டமே இருக்கிறது. எல்லாரும் தூங்கிய பிறகு இரவு 2 மணிக்கு மேல் பிரியாணி சாப்பிட நினைத்தால் சென்னையில் பல இடங்களில் மிட்நைட் பிரியாணி கிடைக்கிறது. மிட்நைட் பிரியாணி, அதிகாலை பிரியாணி, மிட்நைட் டீ என காலையில் 4 மணிக்கு கூட பிரியாணி கிடைக்கும் இடம் சென்னையில் இருக்கிறது. இப்படி இரவில் பிரியாணி சாப்பிடுவதற்காக பயணம் செய்வது தனிக் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இந்தச் சூழலில் காலையில் 4 மணிக்கே நான்வெஜ்ஜில் டிபன் வெரைட்டிகள் கொடுக்கும் உணவகமாக விளங்குகிறது கண்ணன் நான்வெஜ் ரெஸ்டாரெண்ட். சென்னை, ஐ.சி.எப் காலனி, அயப்பாக்கத்தில் இருக்கிற இந்த உணவகத்திற்கு காலை 4 மணியில் இருந்தே உணவு பிரியர்களின் வருகை தொடங்கி விடுகிறது.“சென்னையில் எல்லா தெருக்களிலும் மிட்நைட் பிரியாணி கிடைக்கும். ஆனால், மிட்நைட்டில் டிபன் கிடைக்குமா? எனக்கேட்டால் இல்லை என்பதுதான் உண்மை’’ என பேசத்தொடங்கினார் இந்த உணவகத்தின் உரிமையாளர் கண்ணன்.

“படித்தது எம்.பி.ஏ. படித்து முடித்தவுடனே ஒரு தனியார் வங்கியில் பணியில் இருந்தேன். பிறகு சிங்கப்பூரில் வேலை பார்த்தேன். கொரோனா பிரச்னையால் ஊருக்கு வந்தபிறகு வேலைக்காக எங்கேயும் செல்லவில்லை. அப்போதுதான் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்கு பதிலாக இங்கேயே வேலை பார்க்கலாமென முடிவெடுத்தேன். அப்படித்தான் இந்த உணவகத்தைத் தொடங்கினேன். இந்த உணவகத்தைத் தொடங்கியதன் நோக்கமே நல்ல உணவுகளை, அதுவும் டிபன் வெரைட்டியை நான்வெஜ்ஜில் கொடுக்கணும் என்பதுதான். காரணம் நான் எல்லா ஊர் உணவுகளையும் தேடித்தேடி சாப்பிடக் கூடியவன் என்பதுதான். ஆனால், மிட்நைட்டில் எங்கேயுமே டிபன் கிடைக்காது. என்னை மாதிரி இரவு நேரத்தில் நான்வெஜ்ஜில் டிபன் சாப்பிட நினைப்பவர்களுக்காக இந்த உணவகத்தைத் தொடங்கி இருக்கிறேன்.

அப்பாவுக்கும் ஹோட்டல் தொழில்தான். ஆனால், அது சைவ உணவகம். சிறுவயதில் இருந்தே அப்பாவோடு உணவகத்திலேயே இருந்து வேலை செய்ததால் சமைப்பதில் இருந்து பார்சல் செய்வது வரை அனைத்து வேலையும் எனக்கு அத்துப்படி. அதையும் தாண்டி வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பதும் தெரியும். அப்பாவுடைய உணவகம் 22 வருடங்களுக்கு மேலாக இன்னும் செயல்படுகிறது. அதற்கு காரணம் அவர் தொழிலில் நியாயமாகவும், உண்மையாகவும் இருந்ததுதான். அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு இந்த தொழிலில் எவ்வளவு உண்மையாக இருக்க வேண்டுமென தெரியும். கடை துவங்கிய புதிதில் ஒரு நாள் வியாபாரமாக ரூ.150 மட்டுமே கூட வந்திருக்கிறது. அதற்கெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து உணவகத்தை அதே தரத்தில் நடத்தி வந்தேன். சில நாட்களிலேயே கடைக்கு பல புதிய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள். அவர்கள் சாப்பிட்டுவிட்டு உணவின் சுவையையும், தரத்தையும் பற்றி பல இடங்களில் சொல்லவே அனைவருக்கும் எனது உணவகம் தெரிய வந்தது.

இப்போது குடும்பம் குடும்பமாகவும், நண்பர்களோடும் சாப்பிட வரக்கூடிய தினசரி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். நமது கடையில் டிபன் மட்டும்தான் என்பதால் அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிற உணவகம் காலை 9:30 மணி வரை செயல்படுகிறது. மாலை 6:30 மணிக்கு தொடங்கி இரவு 10:30 மணி வரை இருக்கும். அதேபோல் திங்கள்கிழமை கடைக்கு விடுமுறையும் விடுகிறோம். உணவகத்தில் இருக்கிற மெனுக்கள் எல்லாமே சென்னைக்கு நான் கொண்டுவந்தது. அதாவது, பல ஊர்களில் நான் சாப்பிட்டது. அதே நேரத்தில் சென்னையில் இல்லாத உணவுகளைத்தான் எனது கடைக்கு கொண்டு வந்திருக்கிறேன். நமது கடையில் அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் கறி இட்லி. இட்லிக்கு உள்ளே கறி வைத்து வேகவைத்து கொடுக்கிறோம். மதுரையில் இது ரொம்ப பிரபலம். இந்த கறி இட்லியை சென்னைக்கு முதன்முதலில் கொண்டுவந்தது நம்ம உணவகம்தான். அதேபோல, கறிதோசையும் கொடுக்கிறோம். கறி தோசையில் மட்டுமே பல வெரைட்டிகள் இருக்கின்றன.

சிக்கன் கறிதோசை, மட்டன் கறிதோசை, இறால் கறிதோசை, குடல் கறிதோசை என அனைத்துமே கொடுக்கிறோம். அத்துடன் சேர்த்து சைனீஸ் டிஷ்சான ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் என அனைத்துமே கொடுக்கிறோம். கடைக்கு சாப்பிட வருபவர்கள் சாப்பிடுவதற்கு பல வெரைட்டிகள் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நமது கடையின் இன்டீரியரே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சென்னையின் முக்கிய தளங்கள், பாரதியார், ஜல்லிக்கட்டு என அனைத்துமே கடைக்கு உள்ளே வரைந்திருப்பதால் சாப்பிட வருபவர்களும் அதனை ரசித்தபடியே சாப்பிடுகிறார்கள்.புரோட்டாவில் மட்டுமே பல வெரைட்டி இருக்கிறது. வீச்சு புரோட்டா, முட்டை புரோட்டா, பொரிச்ச புரோட்டா, கிழி புரோட்டா, முட்டை லாப்பா, சிக்கன் லாப்பா என அனைத்துமே இருக்கிறது. நமது கடையின் இன்னொரு ஸ்பெஷல் நூல் புரோட்டா. நூல் புரோட்டா சாப்பிடுவதற்கு சுவையாகவும் மிருதுவாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். வீட்டுக்கும் வாங்கிக்கொண்டு போகிறார்கள்.

சைடிஷ் வெரைட்டிகளுமே சிக்கனிலும், மட்டனிலும் இருக்கிறது. நாட்டுக்கோழி, பெப்பர் சிக்கன், சிக்கன் லாலிபாப், கார்லிக் சிக்கன், குடல்கறி, சிக்கன் – 65 என அனைத்தும் இருக்கிறது. இவை அனைத்துமே காலை 4 மணிக்கே கிடைக்கும். அதுதான் நமது உணவகத்தின் அடையாளமும் கூட. குறிப்பாக இங்கு கிடைக்கும் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும். அதற்கு காரணம் அப்பா 22 வருடமாக இட்லிக்கடை வைத்திருப்பதால் மாவு அரைக்கும் பதம் நன்றாகத் தெரியும். அதனால் இட்லியின் சுவையும் தனித்துவமாக இருக்கும். தனித்துவமான உணவு கொடுத்தபோதிலும் உணவின் விலை அதிகமாக வைக்கவில்லை. கறி இட்லி 25 ரூபாய்க்கும், கறி தோசை 110 ரூபாய்க்கும் கொடுக்கிறோம். இட்லிக்கு கொடுக்கிற சால்னாவுமே தனிமசாலாவால் தயாரிக்கப்படுவதுதான். வெளியூர்களில் சாப்பிடும்போது எதுவெல்லாம் தரமாகவும், சுவையாகவும் இருந்ததோ அதையே கடைக்கு கொண்டுவந்திருக்கிறோம். அங்கு சாப்பிட்ட சுவையை இந்த கடைக்கு கொண்டு வருவதற்காக, அந்த உணவுகத்தின் ரெசிபியை வாங்கியும், அங்கு இருக்கிற மாஸ்டர்ஸை நமது உணவகத்திற்கு வரவைத்து ட்ரைனிங் கொடுத்தும் அந்த உணவகத்தில் இருக்கிற அசல் சுவையை நமது கடைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

அதேபோல, கடைக்கு வாங்கப்படுகிற பொருட்களுமே தரமானதாகத்தான் வாங்கப்படுகிறது. எவ்வளவு சுவையாக சமைத்தாலும் சமையல் செய்கிற பொருட்களில்தான் உணவின் தரம் இருக்கும். அதனால் ஒவ்வொரு பொருட்களையுமே நம்பகமான இடத்தில்தான் வாங்குகிறோம். அதேபோல கடையில் பணியில் இருப்பவர்கள்தான் இந்த உணவகம் இவ்வளவு தூரம் முன்னேறியதற்கு காரணம். காலை 4 மணிக்கு உணவு கொடுக்க வேண்டுமென்றால் இரவு 1 மணிக்கே சமைக்க ஆரம்பிக்க வேண்டும். இரவு தூங்காமல் உணவகத்திற்காக உழைக்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றையுமே உணவகத்திற்காக கவனமாக பார்த்து செய்வதால் உணவின் தரமும், ஆரோக்கியமும் நல்ல முறையில் இருக்கிறது. அதனால்தான் வாடிக்கையாளர்களும் தொடர்ந்து வந்தபடி இருக்கிறார்கள்’’ என்கிறார் கண்ணன்.

ச.விவேக்
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

The post அதிகாலையில் அசத்தல் சுவை! 4 மணிக்கு நான்வெஜ் டிபன் appeared first on Dinakaran.

Tags : Nonvej Tiban ,Chennai ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...