×

கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூட்டு மின் உற்பத்தி திட்டம்

*விரைந்து முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

சின்னசேலம் : கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொடங்கி உள்ள கூட்டுமின் உற்பத்தி திட்டத்தை விவசாயிகள் நலன் கருதி விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1990ம் ஆண்டு கூட்டுறவு சட்டங்களின்படி முறையாக பதிவு செய்து, துவக்கப்பட்டு 7 ஆண்டுகளாக கட்டுமான பணி நடந்து முடிந்த நிலையில், 8.6.1998ல் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலையில் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கரும்பு அரவையை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து சிறப்பாக இயங்கி வந்த ஆலையில் விவசாயிகள் நலன்கருதி கடந்த 2012-2013ல் முதன் முதலாக சிறப்பு கரும்பு அரவைப்பருவம் துவங்கப்பட்டது. மேலும் இந்த ஆலையில் 25 கரும்பு அரவை பருவங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சர்க்கரை உற்பத்தியும் லாபகரமான நிலையில் உள்ளது. இந்த சர்க்கரை ஆலை இயங்குவதற்கான மின்சாரத்தை, காகித ஆலை நிறுவனம் (TNPL) நிலக்கரியை எரித்து நீராவி மின்சாரத்தை வழங்குகிறது. அதற்கு பதிலாக சர்க்கரை ஆலை நிறுவனம் காகிதம் தயாரிக்க தேவையான கரும்பு சக்கையை (பக்காஸ்) தருகிறது.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் எப்போதும் மின்பற்றாக்குறை இல்லாமலிருக்க கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை, செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.965 கோடி மதிப்பில் கூட்டுமின் உற்பத்தி திட்ட பணிகளை முதல்வர் கலைஞர் துவக்கி வைத்தார். குறிப்பாக கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு ரூ.100 கோடி மதிப்பில் 5.6.2010ல் கூட்டு மின் உற்பத்தி திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் கரும்பு அரவை காலங்களில் தினசரி 14,600 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் ஆலை இயக்கத்துக்கு 4,300 யூனிட் மின்சாரம் போக, மீதி உள்ள 10,300 யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வழங்கப்படும். அதைப்போல கரும்பு அரவை இல்லாத காலங்களில் 15,000 யூனிட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்பட்டு, ஆலையின் தேவைக்கு 1,760 யூனிட் மின்சாரம் போக, மீதி உள்ள 13,240 யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வழங்கவும் திட்டமிட்டு, கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த கூட்டுமின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது.

அதாவது கரும்பு அரவை காலத்தில் கரும்பு சக்கையில் இருந்தும், கரும்பு அரவை இல்லாத காலத்தில் நிலக்கரியில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் செயல்முறைக்கு வந்தால் ஆண்டொன்றுக்கு ரூ.30 கோடி லாபம் இந்த ஆலைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த கூட்டுமின் உற்பத்தி திட்ட பணிகளை 2011ல் வந்த அதிமுக அரசு அந்த திட்டத்தை துரிதப்படுத்தாமலும், போதிய நிதி வழங்காமலும் முடக்கி வைத்து விட்டது. மேலும் அந்த ஆலையில் பாய்லர் பணி, ஆலையில் இருந்து சடையம்பட்டு துணைமின் நிலையம் வரை மின்சாரம் கொண்டு செல்ல கோபுரங்கள் அமைக்கும் பணி ஆகியவை ஓரளவு முடிந்துள்ளது. கன்வேயர் அமைத்தல், பாய்லர் அமைத்தல் டர்பன், கூலிங் டவர், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை அமைத்தல், இயந்திரங்களை பொருத்துதல் உள்ளிட்ட மற்ற பணிகளும் ஓரளவு முடிவடைந்துள்ளது.

ஆகையால் விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி முன்னாள் முதல்வர் கலைஞர் துவக்கி வைத்த திட்டத்தை இடையில் நிறுத்தாமல் முதல்வர் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்பற்றாக்குறை ஏற்படாது. மின்தடையில்லாமல் இருந்தால் விவசாயமும் செழித்து வளரும். ஆகையால் பொதுமக்கள் நலன்கருதி இந்த ஆலையை தொழில்துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்து திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

The post கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூட்டு மின் உற்பத்தி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Komuki Cooperative Sugar Mill ,Chinnasalem ,Kachirayapalayam ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...