×

வடசேரி சந்தையை இடமாற்ற தடை விதிக்க கோரி வழக்கு பஸ் நிலைய விரிவாக்க பணிக்கு சிக்கல்

*2 வது கட்ட கருத்து கேட்பு கூட்டமும் ரத்து

நாகர்கோவில் : வடசேரி பஸ் நிலைய விரிவாக்கத்துக்காக, சந்தையை இடமாற்றம் செய்ய தடை விதிக்க கோரி வியாபாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக தமிழ்நாடு அரசு ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது வடசேரி பஸ் நிலையத்தையொட்டி உள்ள வடசேரி கனகமூலம் காய்கறி சந்தையை மாற்றி அமைத்து, வடசேரி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடக்க இருக்கின்றன. வடசேரி சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்தமோகன் ஆகியோர் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற போது, வியாபாரிகளின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பணிகள் நடக்கும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

வியாபாரிகள் தரப்பில், வடசேரி காய்கறி சந்தை தற்போது அமைந்துள்ள இடம், திருவிதாங்கூர் மன்னரால் வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காக தானமாக வழங்கப்பட்டது. இதனை பஸ் நிலையமாக மாற்ற கூடாது. இங்கு 243 கடைகள் உள்ளன. சந்தையை இடமாற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி வருகிறார்கள். வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், சந்தையில் முறைப்படி செயல்பட்ட கடைகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வடசேரி உழவர் சந்தை இடத்தில், காய்கறி சந்தைக்கான இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளிலும் மாநகராட்சி மேயர் மகேஷ் இறங்கி இருந்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும் மேயர் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் வடசேரி சந்தையை இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கூறி, வியாபாரிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் வடசேரி சந்தையில் இருக்கும் வியாபாரிகளின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். இதில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, விளை பொருட்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது. எனவே தான் விவசாயிகள், வியாபாரிகளின் நலன் கருதி சந்தையை மாற்றக்கூடாது. சந்தையை மாற்றம் செய்யாமல், நவீனப்படுத்தும் வகையில் வடசேரி பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

மாநகராட்சி முன்னாள் ஆணையர் சரவணக்குமார் இருந்த போது 9 வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் இன்னும் 3 வருடங்கள் உள்ளன. அரசு சார்பில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் ஆயுட்காலம் 33 ஆண்டுகள் ஆகும். ஆனால் வடசேரி சந்தையில் கடைகள் கட்டப்பட்டு 6 வருடங்கள் தான் ஆகிறது. அதற்குள் அந்த கடைகளை இடிப்பது அரசு பணம் விரயம் ஆகும். எனவே இவற்றை முன்னிறுத்தி நீதிமன்றத்தை நாடி உள்ளோம் என்றனர்.

இந்த பிரச்சினை குறித்து மேயர் மகேஷ் கூறுகையில், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எந்த வகையிலும் வியாபாரிகள் நலனுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று கூறினார்.

வடசேரி பஸ் நிலைய விரிவாக்க பணியை மிக விரைவில் தொடங்கி இன்னும் இரண்டரை ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால், விரிவாக்க பணி எப்போது தொடங்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக முதல் கட்ட கருத்து கேட்பு கூட்டம் போல், மீண்டும் 2 வது கட்ட கருத்து கேட்பு கூட்டம் நடத்த மாநகராட்சி முடிவு செய்திருந்தது. தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், 2 வது கட்ட கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் முடிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post வடசேரி சந்தையை இடமாற்ற தடை விதிக்க கோரி வழக்கு பஸ் நிலைய விரிவாக்க பணிக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Vadaseri ,Nagercoil ,Dinakaran ,
× RELATED சுப்பையார் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் பலி