×

தொடர் மழையால் குளுகுளு சீசன் ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

*படகில் உல்லாச சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஏற்காடு : சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ஏற்காட்டில் குளு குளு சீசன் துவங்கியுள்ளது. பூங்காவில் குடும்பத்துடன் குவிந்த மக்கள், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேசமயம் பூலாம்பட்டி, முட்டல் ஏரி ஆகிய பகுதிகளிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் வெப்பம் தணிந்து குளுகுளு சீசன் நிலவுகிறது.

ஏற்காடு, பூலாம்பட்டி மற்றும் முட்டல் ஏரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு ஏற்காட்டில் உள்ள ரிசார்ட்டுகள், ஓட்டல்களில் குடும்பத்துடன் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்ததால் ஏற்காட்டில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இவர்கள் லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ேராஜா தோட்டம், சேர்வராயன் கோயில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கையை கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து ஏற்காடு படகு இல்லத்திற்கு ெசன்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது. இது சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. கடைகளில் வியாபாரம் களைகட்டியது. அதேபோல், குட்டி கேரளா என்று அழைக்கப்படும் இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் விசைப்படகில் உல்லாச சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பஸ் நிலையம் கைலாசநாதர் கோயில், பூங்கா, மூலப்பாரை பெருமாள் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்து ரசித்தவர்கள், செல்பி எடுத்துக் கொண்டனர். கூடக்கல், குப்பனூர், கோனேரிப்பட்டி படித்துறையில் குவிந்த இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர். மீன் கடைகள், ஹோட்டல்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
விடுமுறை நாளான நேற்று, ஆத்தூர் அடுத்த கல்லாநத்தம் முட்டல் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சுற்றுச்சூழல் சுற்றுலா தளம் இயங்கி வருகிறது.

தற்போது கல்வராயன் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். வனத்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள், முட்டல் ஏரி பகுதியில் உள்ள வனத்துறை பூங்கா மற்றும் ஏரியில் படகு சவாரி சென்று கல்வராயன் மலையின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்தனர்.

The post தொடர் மழையால் குளுகுளு சீசன் ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Glugulu ,Poolambatti ,Salem district ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...