×

இந்தியா 24.1 ஓவரில் 147/2 மழையால் பாதித்த ஆட்டம் இன்று தொடரும் என அறிவிப்பு

கொழும்பு: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் நாளான இன்று தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் என்ற ஸ்கோருடன் இந்தியா தொடர்ந்து விளையாடும். கொழும்பு, பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சற்று அடக்கி வாசிக்க, மறு முனையில் கில் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். கில் 37 பந்தில் 10 பவுண்டரியுடன் அரை சதம் அடிக்க, ரோகித்தும் தன் பங்குக்கு சிக்சர்களாக பறக்கவிட்டு 42 பந்தில் அரை சதத்தை எட்டினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.4 ஓவரில் 121 ரன் சேர்த்து அமர்க்களமான தொடக்கத்தை கொடுத்தது.

ரோகித் 56 ரன் (49 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கில் 58 ரன் (52 பந்து, 10 பவுண்டரி) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, கோஹ்லி – கே.எல்.ராகுல் இணைந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்தியா 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. நீண்ட நேர தாமதத்துக்குப் பிறகும், மைதானத்தின் சில பகுதிகள் ஈரமாக இருந்ததால் போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டது. கள ஆய்வு மேற்கொண்ட நடுவர்கள், ரிசர்வ் நாளான இன்று போட்டி தொடர்ந்து நடைபெறும் என அறிவித்தனர். விராத் கோஹ்லி 8 ரன், கே.எல்.ராகுல் 17 ரன்னுடன் இந்திய இன்னிங்சை தொடர்ந்து விளையாடுவார்கள். போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

 

The post இந்தியா 24.1 ஓவரில் 147/2 மழையால் பாதித்த ஆட்டம் இன்று தொடரும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Colombo ,Pakistan ,Asian Cup ODI ,Super 4 round ,Dinakaran ,
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு