×

உலக கோப்பையில் பிசிசிஐ குளறுபடி; பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு மட்டுமே நன்மை: வெங்கடேஷ் பிரசாத் விளாசல்

மும்பை: 2023 உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை இந்த முறை ஆன்லைனில் விற்பனை என பிசிசிஐ கூறியது. சினிமா டிக்கெட் விற்பனையில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் புக் மை ஷோ (Bookmyshow) தளத்தில் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்கள் விற்கப்படும் என அறிவித்தது. ஆனால் அறிவித்த தேதி மற்றும் நேரத்தில் அந்த தளத்திற்கு சென்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பல போட்டிகளுக்கான பல லட்சம் டிக்கெட்கள் சில நிமிடங்களில் காலியானது. பலருக்கும் டிக்கெட் காலி என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. ஆனால், அடுத்த நாளே உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்கள் மூன்றாம் கட்ட டிக்கெட் விற்பனை தளங்களில் விற்கப்பட்டன. அவை அனைத்தும் பிளாக் டிக்கெட்கள் என்பதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் மற்றும் கோபம் அடைந்தனர்.

இந்த நிலையில் ரசிகர்கள்தான் முக்கியம் என அறிக்கை விட்டு மீண்டும் 4 லட்சம் டிக்கெட்கள் விற்கப்படும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. இந்த முறை புக் மை ஷோவை விடுத்து நேரடியாக ஐசிசி இணையதளத்தில் டிக்கெட்கள் விற்கப்பட்டன. ஆனால், இப்போதும் ரசிகர்களுக்கு டிக்கெட்கள் கிடைக்கவில்லை. சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்களும் காலியாகின.

இந்நிலையில் பிசிசிஐயின் முடிவுகள் குறித்து முன்னாள் வீரர் வெங்கடேஷ் கூறுகையில், “எந்த சந்தேகமும், வாதமும் வேண்டாம். நாம் உலகக்கோப்பைக்கான முன்னோட்டத்தை சொதப்பி விட்டோம். முதலில் அட்டவணையை வெளியிட காரணமே இல்லாமல் தாமதம் செய்தது, அது போதாது என அட்டவணையை மாற்றி 5 போட்டிகளுக்கான தேதியை மாற்றியது. அதுவும் போதாது என வெளிப்படைத்தன்மை அற்ற, முறையற்ற டிக்கெட் விற்கும் முறையால் பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு மட்டுமே நன்மை நடந்துள்ளது” என காட்டமாக கூறி உள்ளார்.

The post உலக கோப்பையில் பிசிசிஐ குளறுபடி; பிளாக் டிக்கெட் விற்பவர்களுக்கு மட்டுமே நன்மை: வெங்கடேஷ் பிரசாத் விளாசல் appeared first on Dinakaran.

Tags : BCCI ,World Cup ,Venkatesh Prasad Vlasal ,MUMBAI ,2023 World Cup ,Dinakaran ,
× RELATED உலக கோப்பையில் ரோகித், கோஹ்லி ஆடுவது...