×

ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்: 55 வருடங்கள் பழமையானது

திருவாரூர்: திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்ற நாள் முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், சமத்துவபுர வீடுகள் போன்ற வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் நீண்ட காலத்திற்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கும், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 34 ஊராட்சிகள் இருந்து வரும் நிலையில், இதற்கான ஒன்றிய அலுவலகமானது திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வருகிறது.

இந்த அலுவலக கட்டிடமானது கடந்த 1967ம் ஆண்டில் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மறைந்த முதல்வர் கருணாநிதி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த கட்டிடம் கட்டப்பட்டு 55 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கட்டிடத்தில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசின் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், வீடு கட்டும் திட்டம் மற்றும் சாலை, குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக பணியாற்றி வரும் அலுவலர்கள் அனைவருக்கும் தனிதனியாக மேஜை, பீரோ மற்றும் கணினி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டும் இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.3 கோடியே 70 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில், 17 ஆயிரத்து 323 சதுர அடியில் முதல் தளம் மற்றும் 2ம் தளம் என இந்த புதிய கட்டிடமானது கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2024 மார்ச்சில் நிறைவு
ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடமானது, ஒன்று திரட்டிய ஓதுக்கிடு செய்யப்பட்ட வருவாய் நிதி திட்டத்தில் 2021-22 நிதியாண்டு மூலம் ரூ 3 கோடியே 70 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, கீழ்தளம் மற்றும் முதல்தளம் தலா 8 ஆயிரத்து 216.33 சதுர அடி வீதம் 16 ஆயிரத்து 432.66 பரப்பளவிலும், போர்ட்டிகோ 894.8 சதுர அடி பரப்பளவிலும் என 17 ஆயிரத்து 327.46 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாத்திற்குள் பணி முடிவடையும் வகையில் ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றுடன் ஓப்பந்தம் போடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

The post ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்: 55 வருடங்கள் பழமையானது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur Union Office ,Tiruvarur ,Thiruvarur Pruvati Union office ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...