×

திருச்சுழி அருகே கல்லூரணி காட்டுப்பகுதியில் பழங்கால காத்தவராயன் சிற்பம் கண்டெடுப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே கல்லூரணி காட்டுப்பகுதியில் மிகவும் பழமையான சிற்பம் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த செல்வகணேஷ், கல்லூரி மாணவர் ஜோஸ்வா ஆகியோர் கொடுத்த தகவலை தொடர்ந்து, பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் செல்லப்பாண்டியன், தாமரைக்கண்ணன், அருப்புகோட்டை தர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது ஆய்வாளர்கள் கூறியதாவது: இச்சிற்ப்பமானது புராணங்களில் சொல்லப்படக்கூடிய காத்தவராயனின் சிற்பமாகும். இவருக்கு காத்தவீரிய அர்ஜூனா, அல்லது சஹஸ்ரபாஹூ அர்ஜூனா அல்லது சஹஸ்ரார்ஜீனா என்றும் பல்வேறு பெயர்கள் உள்ளன. இவர் மஹிஷ்மதி நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி என்னும் நகரை, தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் ஆவார். இவர் மிகப்பெரிய வீரர். இவர் ஆயிரம் கரங்களை உடையவராகவும் தத்தாத்ரேயரின் சிறந்த பக்தரும் ஆவார். புராணங்களின்படி இவர் சுதர்சன சக்கரத்தின் அவதாரமாக கருதப்படுகிறார்.

புராணங்களின்படி மிகவும் கொண்டாடப்பட்ட அரசன் காத்த வீரிய அர்ஜூனன் ஆவார். இவரது பெயர் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. இவர் ராவணனின் சம காலத்தை சேர்ந்தவராக கருதப்படுகிறார். இவர் இலங்கையின் மீது படையெடுத்தார். இருவருக்கும் நடந்த போரில் இராவணன் தோற்கடிக்கப்பட்டு சிறை வைக்கப்படுகிறார். ராவணனேயே தோற்கடித்த மிகப்பெரிய வீரன் என்று புராணங்கள் கூறுகின்றன.
நாங்கள் கண்டுபிடித்த சிற்பத்தின் தலை சிதைக்கப்பட்டுள்ளது. தலை இல்லாமலேயே சிற்பத்தின் உயரம் 5 அடியும், அகலம் 2 அடியும் ஆகும். வலது கை முழுவதுமாக சிதைக்கப்பட்டுள்ளது. இடது கையை ஹடி ஹஸ்தமாக வைத்துள்ளார். ஹடி என்பது இடுப்பை குறிக்கும். இவர் கழுத்தில் நிறைய ஆபரணங்கள் அணிந்துள்ளார். அதிலும் குறிப்பாக காரைப்பூ என்ற ஆபரணத்தை அணிந்து உள்ளார். இந்தக் காரைப்பூ ஆபரணத்தை அணிந்துள்ளவர் காத்த வீரிய அர்ஜூனன் மட்டுமே.

இந்த சிற்பத்திற்கு தலை இல்லாவிட்டாலும் இவர் அணிந்துள்ள ஆபரணத்தை வைத்து இவர் காத்த வீரிய அர்ஜூனன் தான் என்று நாம் உறுதியாக சொல்லலாம். இதைப் போன்று புராணங்கள் தொடர்புடைய சிற்பங்கள் எங்களது பாண்டி நாட்டில் தான் அதிகளவில் கிடைத்து வருகிறது. இதன் மூலமாக முற்கால பாண்டியர்கள் ஆன்மீகத்திலும், கோயில் கட்டடக் கலையிலும், சிற்பக் கலைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை நாம் தெளிவாக அறிய முடிகிறது. இந்த சிற்பத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும். இது போன்ற பழமையான சிற்பங்களை ஒவ்வொருவரும் போற்றி பாதுகாக்க வேண்டுமென கூறினர்.

The post திருச்சுழி அருகே கல்லூரணி காட்டுப்பகுதியில் பழங்கால காத்தவராயன் சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruksha ,Tirkuskru ,Selvakanesh ,Avvur ,Tiruvya ,Cyclone ,
× RELATED அலைச்சல் இல்லாமல் ஆதார் திருத்தம்...