×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனல் மெத்வதேவ்-ஜோகோவிச் மோதல்: நடப்பு சாம்பியன் அல்கராஸ் வெளியேற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சுடன் ரஷ்யாவின் டானில் மெத்வதேவ் மோதுகிறார். அரையிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் (20 வயது, 47வது ரேங்க்) உடன் மோதிய ஜோகோவிச் (36 வயது, 2வது ரேங்க்) 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று 10வது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 41 நிமிடங்களுக்கு நீடித்தது. ஜோகோவிச் ஏற்கனவே 3 முறை யுஎஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனும் உலகின் நம்பர் 1 வீரருமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் (20வயது), முன்னாள் சாம்பியன் டானில் மெத்வதேவ் (27 வயது, 3வது ரேங்க்) மோதினர். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை மெத்வதேவ் 7-6 (7-3) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். தொடர்ந்து 2வது செட்டையும் 6-1 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். மெத்வதேவ் வெற்றி ஏறக்குறைய உறுதியான நிலையில் 3வது செட்டை 6-3 என்ற கணக்கில் கார்லோஸ் கைப்பற்றி நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால், 4வது செட்டில் அதற்கு வாய்ப்பளிக்காத மெத்வதேவ் அதனை 6-3 என்ற கணக்கில் தனதாக்கினார்.

3 மணி, 19 நிமிடங்களுக்கு நடந்த இப்போட்டியில் மெத்வதேவ் 7-6 (7-3), 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனை போராடி வென்று 3வது முறையாக யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்னேறினார். அவர் ஒரு முறை யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2023 சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் முன்னாள் சாம்பியன்கள் ஜோகோவிச் – மெத்வதேவ் மோதுகின்றனர்.

* ஜோகோவிச் – மெத்வதேவ் இருவரும் 14 முறை மோதியுள்ளதில் ஜோகோவிச் 9-5 என முன்னிலை வகிக்கிறார்.

* இந்த 14 ஆட்டங்களில் 3 பைனல். அதில் 2 கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்கள். ஏடிபி 1000 பாரிஸ் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் பைனலில் ஜோகோவிச் வெல்ல, யுஎஸ் ஓபனில் மெத்வதேவ் வாகை சூடியுள்ளார். இந்த 3 ஆட்டங்களும் 2021ல் நடந்தவை.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனல் மெத்வதேவ்-ஜோகோவிச் மோதல்: நடப்பு சாம்பியன் அல்கராஸ் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Medvedev ,Djokovic ,US Open ,Algaras ,New York ,Novak Djokovic ,US Open Grand Slam ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்