புதுடெல்லி: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அவர்களின் முதலீட்டாளர்களின் கடன் தகுதியை நிரூபிக்கும் வகையில் 3 ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை வழங்கக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. பாரத் பே துணை நிறுவனரும், முன்னாள் நிர்வாக இயக்குநருமான அஷ்னீர் குரோவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கடந்த ஒரு மாதத்தில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (நான் பங்குகள் வைத்துள்ளவை உட்பட) அனைத்து பங்குதாரர்களின் 3 ஆண்டு ஐடிஆர் (வருமான வரி தாக்கல் அறிக்கை) வழங்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஒரு பங்குதாரரோ தனி நபரோ தங்களின் ஐடிஆர்களை எதற்காக தனியார் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? பங்குதாரர்களின் கடன் தகுதி நிலையை எதற்காக நிரூபிக்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தற்போது பதிலளித்துள்ள வருமான வரித்துறை, ‘‘வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 68ன் கீழ், முதலீட்டாளரின் அடையாளம், முதலீட்டாளரின் கடன் தகுதி மற்றும் பரிவர்த்தனையின் உண்மைத்தன்மை ஆகியவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டியது கட்டாயம்’’ என கூறி உள்ளது.
அதற்கு பான் எண் கொடுத்தால் மட்டும் போதுமே, தேவையில்லாமல் வருமான வரி தாக்கல் அறிக்கையை தர உத்தரவிடுவது வரி பயங்கரவாதத்தின் உச்ச கட்டம் என இன்போசிஸ் இணை நிறுவனரும் முதலீட்டாளருமான மோகன்தாஸ் பாய் கொந்தளித்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் கடன் தகுதி தகவல் கோரி ஐடி நோட்டீஸ்: தொழிலதிபர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.
