×

வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்…!


இப்படியொரு தினம் அனுசரிக்கப்படுவதை விட கொடுமையான விஷயம் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால், ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் வரை தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல் நம்மை மிரள வைக்கிறது. உலகளவில் 40 வினாடிக்கு ஒரு தற்கொலை நடப்பதாக கூறப்படும் ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை தடுப்பதற்காகவும், அனைவரும் ஒருங்கிணைந்து தற்கொலை எண்ணத்தை தடுக்கும் நோக்கத்தில் உருவானதே உலக தற்கொலை தடுப்பு தினம். சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம், உலக சுகாதார அமைப்பு, சர்வதேச மனநல கூட்டமைப்பு இணைந்து, கடந்த 2003ம் ஆண்டு இத்தினத்தை உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது.

தொடர்ந்து இத்தினம் ஆண்டுதோறும் செப்.10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகில் நடக்கும் தற்கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு, வடகொரியா, இந்தியா, இந்தோனேஷியா நேபாளம் ஆகிய நாடுகளில் நிகழ்கின்றன. தற்கொலை என்பது பொதுவாக கோழைத்தனமான முடிவு என கூறப்படுகிறது. ஆனால், தொழில் அல்லது மிக அத்தியாவசிய ஒன்றுக்காக கடன் வாங்கி கட்ட முடியாத சூழல், தொழில் பாதிப்பு, பணிப்பளு, மன அழுத்தம், குடும்ப பிரச்னை, தீராத நோய் பிரச்னை, காதல் தோல்வி, நெருங்கியவர்களின் துரோகம் இப்படி பல சம்பவங்கள் தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன. இந்தியாவில் கூலித்தொழிலாளிகளே அதிகளவு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

தமிழ்நாடு 2வது இடம் : தேசிய குற்ற ஆவண காப்பக குறிப்பின்படி, தற்கொலை செய்வோர் எண்ணிக்கை இந்தியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2020 – 21ல் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2021-22ல் சுமார் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2020-21ஐ விட 7.2 சதவீதம் அதிகம். மேலும், மாநிலங்களை பொறுத்தவரை முதலிடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. இங்கு 22,207 பேர் (மொத்த இறப்பில் 13.5%) தற்கொலை செய்துள்ளனர். தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. இங்கு 18,925 பேர் (மொத்த இறப்பில் 11.5%) தற்கொலை செய்துள்ளனர்.

மபி மாநிலம் 14,965 தற்கொலைகளுடன் 3ம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட உபி மாநிலத்தில் 3.5% தற்கொலையே பதிவாகி உள்ளது. சரி.. தற்கொலையை தடுக்க வாய்ப்பிருக்கிறதா? ஏன் இல்லை. எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. அதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். நம்மை நாமே தீர்த்துக் கொள்வது ஒருபோதும் சரியான தீர்வாகாது. நம் மனதிற்குள்ளேயே வாட்டி எடுக்கும் பிரச்னைகளை சரியான நபரை தேர்ந்தெடுத்து கூறினால், அந்த பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சிறு வாய்ப்பாவது ஏற்படும். அல்லது நமது நண்பர்கள், உறவினர்களில் யாராவது ஒரு விரக்தியான மனோபாவத்தில் இருந்தால், அவர்களை அணுகி பிரச்னைகளை கேட்டு உதவினால், மீண்டு வரக்கூடும்.

மனநல மருத்துவரை அணுகலாம். அல்லது அவர்களின் பிரச்னைகளுக்கான சரியான தீர்வை, உதவியை செய்து கொடுத்து மீண்டு வரச் செய்யலாம். இதையும் மீறி நிகழ்த்தப்படும் தற்கொலை சம்பவங்கள், அதுவும் குடும்பத்துடன் தற்கொலை செய்வது எல்லாம் மிக மிக துயரமான சம்பவமாகும். அதனை தடுக்கவே இதுபோன்ற தினங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட முடிவை நாம் கண்டறிவது மிகவும் சிரமம். அதேநேரம் நம்மை சார்ந்த ஒருவர், தனது துயரங்களை பகிர்ந்தால், நம்மால் முடிந்த உதவிகளை செய்வதே சிறப்பாகும். மற்றபடி தற்கொலை முடிவில் இருப்பவர்களுக்கு தலைப்பே பதில்…. வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்…!

The post வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்…! appeared first on Dinakaran.

Tags : earth ,
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!