×

கன்னியாகுமரி ஏகாட்சர மகா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 19-ந்தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி இதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று இரவு நடந்தது.1ம்திருவிழாவான இன்று காலையில் கொடியேற்றம் நடந்தது.

முன்னதாக கொடிமரத்துக்கு விசேஷ அபிஷேகங்கள் சிறப்பு வழிபாடுகள் விசேஷ பூஜைகள் நடந்தது. அதன்பிறகு மேளதாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க காலை 8.42 மணிக்கு கொடியேற்றப்பட்டது. சங்கர் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டுகொடிஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத் தலைவர் அனுமந்தராவ், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன், தென் தாமரைகுளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ் உள்படபலர் கலந்து கொண்டனர்.

திருவிழாவையொட்டி தினமும் காலையில் யாக சாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை போன்றவைகளும் நடக்கிறது. 6-ம் திருவிழாவான 14-ந்தேதி இரவு 7 மணிக்கு 108 கும்ப கலச முதல் கால பூஜைகள் தொடங்குகிறது. 7ம் திருவிழாவான 15-ந்தேதி காலை 9 மணிக்கு 108 கலச அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 10-ம்திருவிழாவான 18-ந்தேதி காலை 9.20 மணிக்கு விநாயகருக்கு 18ம் கால யாக கலச அபிஷேகமும், அஷ்ட கலச அபிஷேகமும் நடக்கிறது. 10-30 மணிக்கு 21 வகையான அபிஷேகங்களும் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு மங்கள இசையும், சாயராட்சை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் உற்சவமூர்த்திக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 6-30மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம்திருவிழாவான19-ந்தேதி காலை7-35 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரிவிவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானு தாஸ், இணை பொதுச் செயலாளர்கள் ரேகாதவே, கிஷோர் பொருளாளர் பிரவீன் தபோல்கர், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த  பத்மநாபன் மற்றும் விவேகானந்த கேந்திர நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

The post கன்னியாகுமரி ஏகாட்சர மகா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi festival ,Kanyakumari Ekatsara Maha Ganapati Temple ,Thalavai Sundaram MLA ,Kanyakumari ,Vivekananda Kendra Complex ,Kanyakumari Vivekanandapuram ,Ekatsara Maha Ganapati Temple ,Vinayagar Chaturthi ,
× RELATED மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் விநாயகர்...