×

சாலை, குடிநீர் வசதிகளை கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு 4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில்

கலசபாக்கம், செப்.9: கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில் பக்தர்களின் வசதிக்காக சாலை மற்றும் குடிநீர் வசதி மேற்கொள்வது குறித்து கூடுதல் கலெக்டர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டார். கலசபாக்கம் ஒன்றியத்தில் நேற்று கூடுதல் கலெக்டர் ரிஷப் கடலாடி, தென்மகாதேவமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தினம் தோறும் அனைத்து தொகுப்புகளிலும் வேலை நடைபெற வேண்டும். நூறு நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வளர்ச்சி பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வத மலைக்கு சாலை மற்றும் குடிநீர் பணிகள் மேற்கொள்வது குறித்து கூடுதல் கலெக்டர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:

கலசபாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் திருப்திகரமாக உள்ளது. ஒரு சில பணிகளில் சிறு சிறு தவறுகள் உள்ளன. அவற்றை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பர்வதமலை அடிவாரத்தில் சாலை வசதி மற்றும் மலை உச்சி வரை குடிநீர் வசதி செய்து தர கலெக்டருடன் கலந்து ஆலோசனை செய்து இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சாலை அகலப்படுத்தும் இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் பிடிஓக்கள் சத்தியமூர்த்தி, முருகன், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிதுரை, ஊராட்சித்தலைவர்கள் எழில்மாறன், ஆறுமுகம், பத்மாவதி பன்னீர்செல்வம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post சாலை, குடிநீர் வசதிகளை கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு 4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில் appeared first on Dinakaran.

Tags : Parvada Hill ,Kalasapakkam ,Parvatha hill ,Dinakaran ,
× RELATED விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்...